கொரோனா வைரஸ் தாக்குதல்: இறந்தவர்களை புதைக்க போராடும் இத்தாலி


கொரோனா வைரஸ் தாக்குதல்: இறந்தவர்களை புதைக்க போராடும் இத்தாலி
x
தினத்தந்தி 23 March 2020 10:42 PM GMT (Updated: 23 March 2020 10:42 PM GMT)

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இறந்தவர்களை புதைக்க இத்தாலி போராடி வருகிறது.

ரோம்,

கொரோனா வைரசால் இத்தாலியில் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை புதைக்க இத்தாலி அரசு போராடி வருகிறது. போதிய ஊழியர்கள் இல்லாததால் உடனடியாக உடல்களை அடக்கம் செய்ய முடியவில்லை. இதனால் இறந்தவர்களின் உடல்கள் பல நாட்களாக சீல் வைக்கப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இறுதி சடங்கு மேற்கொள்வதற்கு முன்பு அவர்களின் உடமைகளை சவப்பெட்டியின் அருகில் பைகளில் வைத்து இருக்கிறார்கள்.

இதுபற்றி பெர்காமோ நகரின் இறுதிச் சடங்குகள் நடத்தும் மையங்களின் இயக்குனரான அன்டோனியோ ரிச்சியார்டி கூறுகையில், “ஒரு மாதத்தில் சாதாரணமாக 120 இறுதி சடங்குகள் நடைபெறும். ஆனால் கடந்த இரண்டு வாரங்களுக்குள் ஒரு தலைமுறையையே இழந்துவிட்டோம். இதற்கு முன்பு இதுபோல் நாங்கள் பார்த்ததில்லை. இது எங்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. பெர்காமோ நகர் முழுவதும் சுமார் 80 இறுதிச் சடங்கு மையங்கள் உள்ளன. தற்போது ஒவ்வொன்றும் ஒரு மணி நேரத்திற்கு டஜன் கணக்கான அழைப்புகளை பெறுகின்றன. இறந்தவர்களை கையாள்வது தொடர்பாக மருத்துவமனைகள் கடுமையான விதிகளை கடைபிடித்து வருகின்றன. குடும்பங்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களை பார்க்கவோ அல்லது அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யவோ முடியாது. எங்கள் ஊழியர்கள் பலர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் உடல்களை கொண்டு செல்லவும் முடியவில்லை. இறுதி சடங்கு செய்யவும் அதிகமானோர் இல்லை” என்று கவலையுடன் கூறினார்.


Next Story