கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம்


கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம்
x
தினத்தந்தி 23 March 2020 11:16 PM GMT (Updated: 23 March 2020 11:16 PM GMT)

கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ திடீர் பயணமாக ஆப்கானிஸ்தானுக்கு சென்றார்.

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அமெரிக்க அரசு மற்றும் தலீபான் பயங்கரவாதிகள் இடையே கடந்த மாத இறுதியில் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருக்கும் 5,000 தலீபான் கைதிகளை அந்த நாட்டு அரசு விடுதலை செய்யும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அதே போல் தலீபான்கள் தரப்பில் அவர்களின் பிடியில் இருக்கும் 1,000 ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் மற்றும் ராணுவவீரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலீபான் கைதிகளை விடுவிக்க முடியாது என தெரிவித்தார். இதனால் தலீபான் பயங்கரவாதிகள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான சில தினங்களிலேயே மீண்டும் தாக்குதலை நடத்த தொடங்கினர்.

இதனிடையே அண்மையில் ஆப்கானிஸ்தான் அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற அஷ்ரப் கனி 5,000 தலீபான் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஆணையில் கையெழுத்திட்டார்.

எனினும் முதற்கட்டமாக 1,500 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தலீபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு மற்ற கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தலீபான்கள் ஒரே சமயத்தில் 5,000 கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் தலீபான் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தாமதமானது.

இது ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாகி உள்ளது. மேலும் இரு தரப்புக்குமான மோதல் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு உள்நாட்டு போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் பயணமாக நேற்று ஆப்கானிஸ்தானுக்கு சென்றார்.

உயிர்க்கொல்லியான கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மைக் பாம்பியோ இந்த திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதால் அனைத்து சர்வதேச பயணங்களையும் ரத்து செய்யும்படி அமெரிக்க மக்களை அந்த நாட்டு வெளியுறவுத்துறை கடுமையாக எச்சரித்துள்ள நிலையில் மைக் பாம்பியோவின் இந்த அவசர பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ‘ஜி7’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் உள்பட 2 உள்நாட்டு பயணங்களை மைக் பாம்பியோ ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

மைக் பாம்பியோவின் வருகை ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலீபான்கள் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையின் முட்டுக்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை செயல்படுத்துவது மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்துவது தொடர்பாக அதிபர் அஷ்ரப் கனியுடன் மைக் பாம்பியோ தீவிர ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.


Next Story