இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து பெண் உள்பட 9 பேர் பலி


இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து பெண் உள்பட 9 பேர் பலி
x
தினத்தந்தி 20 April 2020 12:20 AM GMT (Updated: 20 April 2020 12:20 AM GMT)

இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியானார்கள்.

ஜகார்த்தா, 

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா கனிமவளம் நிறைந்த நாடாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கம், தாமிரம் மற்றும் நிலக்கரி போன்ற கனிமங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதனால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த சுரங்கங்கள் அனைத்தும் முறையான உரிமம் பெற்று, உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் இயங்கி வரும் அதே வேளையில், சட்டவிரோத மற்றும் உரிமம் பெறாத சுரங்கங்களும் இந்தோனேசியாவில் பரவலாக காணப்படுகின்றன.

அந்த வகையில் அந்நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள சோலோக் நகரில் தங்க சுரங்கம் ஒன்று சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்தது. உள்ளூரை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் இந்த சுரங்கத்தில் வேலைபார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஒரு பெண் உள்பட 9 பேர் இந்த சுரங்கத்தில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது.

இதில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய சுரங்க தொழிலாளர்கள் குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர்.

இடைவிடாது கொட்டிய மழைக்கு மத்தியிலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும் இடிபாடுகளுக்குள் சிக்கிய 9 தொழிலாளர்களையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

இதேப்போல் கடந்த ஆண்டு இறுதியில் வடக்கு சுலாவேசி மாகாணத்தின் மோங்கோன்டவ் நகரில் இயங்கி வந்த சட்டவிரோத தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 16 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

Next Story