சீனாவில் குணமாகிய பலருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு


சீனாவில் குணமாகிய பலருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு
x
தினத்தந்தி 23 April 2020 12:45 PM GMT (Updated: 23 April 2020 12:45 PM GMT)

சீனாவில் குணமாகிய பலருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் உள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது.

உகான்

சீனாவின்  உகான நல்கரில் டிசம்பர் மாதத்தில் கொரோனா தொடங்கிய உடன்  மருத்துவர்கள், நோயாளிகள் என அனைவரையும் அதில் இருந்து மீட்கும் முயற்சியாக பலருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி சிகிச்சை அளிக்கப்பட்ட பலருக்கு ஒரு கட்டத்தில் கொரோனா இல்லை என்று சோதனையில் வந்தது. இதையடுத்து குணம் அடைந்ததாக அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் கொரோனா வைரஸில் இருந்து குணமாகிய பலருக்கு 70 நாட்களுக்குப் பிறகு எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில் மீண்டும் சோதனை செய்து பார்த்த போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இது சீன அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் எந்த அறிகுறியும் இல்லாமல் உடலில் கொரோனா இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது போல் பாதிக்கப்பட்ட நிலையில் எத்தனை கொரோனா வைரஸ் நோயாளிகள் இருக்கிறார்கள் என்பது குறித்து சீன அதிகாரிகள் சரியான தகவல்களை இதுவரை வெளியிடவில்லை, ஆனால் ராய்ட்டர்ஸ் மற்றும் பிற ஊடகங்களால் பெறப்பட்ட சீன மருத்துவமனைகளின் தகவல்களின் படி குறைந்தது டஜன் கணக்கானவர்கள் இருப்பதாக தெரிவிக்கின்றன.

சீன சுகாதார அதிகாரிகள் கூற்றுப்படி, இப்படி மீண்டும் கொரோனா வைரஸ் உள்ளதாக சோதனையில் தெரியவந்த எவரும் மற்றவர்களுக்கு தொற்றை பரப்பியதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

ஆனால் பிற நாடுகளில் உள்ள சுகாதார அதிகாரிகளிடையே இந்த சம்பவம் கவலையை அதிகரித்துள்ளது. அத்துடன் உலகளவில் பரிந்துரைக்கப்பட்ட 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் மீதும் சந்தேகம் எழுப்பபட்டுள்ளது. ஏனெனில் தென் கொரியாவில், சுமார் 1,000 பேருக்கு நான்கு வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு பின்னர் கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது.அதே நேரத்தில் இத்தாலியில் நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்களுக்கு பின்னர் கொரோனா பாசிட்டிவ் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

குணம் அடைந்த நோயாளிகளுக்கு 60 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கவலைகளை அதிகரிக்கும் அதேசமயம், குணம் அடைந்த நோயாளிகளின் உடற்பாகங்களில் கொரோனா தங்கியிருக்கக் கூடும் என்பதால் அவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆனால் அது பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் தென்கொரியா மருத்துவ ஆராய்ச்சி ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story