ஊரடங்கால் 60 ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம் - பிரான்ஸ் சுகாதார மந்திரி பெருமிதம்


ஊரடங்கால் 60 ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம் - பிரான்ஸ் சுகாதார மந்திரி பெருமிதம்
x
தினத்தந்தி 26 April 2020 9:00 PM GMT (Updated: 26 April 2020 9:00 PM GMT)

ஊரடங்கு உத்தரவ் 60 ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருப்பதாக பிரான்ஸ் சுகாதார மந்திரி கூறியுள்ளார்.

பாரீஸ், 

கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் அரசு கடந்த மாதம் 13-ந்தேதி ஊரடங்கை அறிவித்தது. இது அடுத்த மாதம்(மே) 11-ந் தேதி வரை அமலில் இருக்கும். இதற்கு மக்களும் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

இது குறித்து பிரான்ஸ் நாட்டின் ‘பொது சுகாதாரத்துறை பள்ளி’ மேற்கொண்ட ஆய்வை சுட்டிக்காட்டி சுகாதார மந்திரி ஆலிவர் வெரான் கூறியதாவது:-

சரியான நேரத்தில் ஊரடங்கை நடைமுறை படுத்தியதால், நாம் 60 ஆயிரம் மனித உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம். இந்த எண்ணிக்கை இதைவிட கூடுதலாகவும் இருக்கலாம். இந்த நடவடிக்கையை எடுத்திருக்காவிட்டால் நாட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவுகளில் நமக்கு ஒரு லட்சம் படுக்கைகள் தேவைப்பட்டிருக்கும். 

ஆனால் நம்மிடம் உள்ள படுக்கைகளோ பத்தாயிரம்தான். எனவே ஊரடங்கை அமல்படுத்தியதால் இப்பிரச்சினை அதிகமாக எழவில்லை. ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி கொரோனா அவசர சிகிச்சை பிரிவுகளில் நாம் மேலும் 10 ஆயிரம் படுக்கைகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய அவகாசம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஊரடங்கால், பிரான்சுக்கு மட்டும் அல்ல, அதை அமல்படுத்திய எல்லா நாடுகளுக்குமே இந்த பலன் கிடைத்திருக்கும் என்பது நிச்சயம்!

Next Story