கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்


கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்
x
தினத்தந்தி 12 Aug 2020 12:15 AM GMT (Updated: 11 Aug 2020 8:29 PM GMT)

உலகை அச்சுறுத்தும் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்கான முதல் தடுப்பூசி தயார் என ரஷியா அறிவித்துள்ளது. தடுப்பூசியை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டி உள்ளன.

மாஸ்கோ, 

கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே உலகமே அஞ்சி நடுங்குகிறது.

இந்த வைரசின் பிடியில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கி தவிக்கின்றன. நேற்று மாலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 1 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று பாதித்துள்ளது. 7 லட்சத்து 37 ஆயிரத்துக்கு அதிகமானோரை இந்த வைரஸ் பலியும் கொண்டுள்ளது.

கொரோனாவுக்கு முடிவு கட்ட தடுப்பூசி ஒன்றுதான் ஆயுதமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதனால்தான் இதுவரை வேறு எந்த தொற்று நோய்க்கும் இல்லாத அளவில், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவற்றில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ உள்ளிட்ட 6 தடுப்பூசிகள் மட்டும் பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இந்த நிலையில், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் ரஷியாவில் (சுமார் 8 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு பாதிப்பு, 15 ஆயிரம் பேர் தொற்றால் இறப்பு) அந்த நாட்டின் ராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசி பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ள நிலையில், விரைவில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, அந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாராகி நேற்று பதிவு செய்யப்பட்டுவிட்டது.

இதையொட்டி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மாஸ்கோவில் கூறியதாவது:-

உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசி, இன்று (நேற்று) காலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் திறம்பட செயல்படுகிறது என்று எனக்கு தெரியும். இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

இந்த தடுப்பூசியானது, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இந்த தடுப்பூசி ஆற்றல் மிக்கது என்பது சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது எனவும் தெரிய வந்துள்ளது.

இதை எனது 2 மகள்களில் ஒருவர் போட்டுக்கொண்டார். அவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டபோது உடல் வெப்ப நிலை 100.4 டிகிரி பாரன்ஹீட் இருந்தது. மறுநாளில் அவளது உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டாக குறைந்து விட்டது. இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் அவருக்கு செலுத்தப்பட்டது. அப்போது அவரது உடல் வெப்ப நிலை லேசாக அதிகரித்தது. பின்னர் அது சரியாகி விட்டது. இப்போது அவர் நன்றாக இருப்பதாக உணர்கிறார். அவருக்கு நல்ல அளவில் ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்பு பொருள்) உருவாகி உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-5’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 1957-ம் ஆண்டு, ரஷியாவில் ஏவப்பட்ட ஸ்புட்னிக்-1 விண்கலம், முதல் விண்கலம் என்ற வகையில் உலகம் முழுவதும் விண்வெளி ஆராய்ச்சியை தூண்டியது.

அதே போன்று உலகில் பதிவு செய்யப்பட்ட முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி என்ற வகையில் ‘ஸ்புட்னிக்-5’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி பற்றி ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ கூறும்போது, “தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து விட்டன. முதலில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த தடுப்பூசியை பெறுவார்கள். அதைத் தொடர்ந்து பல கட்டங்களாக பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும். முதலில், பாதிக்கப்பட்ட நபர்களுடன் பணியின்போது தொடர்பில் இருந்தவர்களுக்கு தடுப்பூசியை வழங்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு வரும் ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த தடுப்பூசி போடப்படும் என ரஷிய மருந்துகள் பதிவாளர் அறிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே முன்வந்துள்ளார் என்பது கவனத்தை கவர்வதாக அமைந்துள்ளது.

இதற்கிடையே இந்த தடுப்பூசியை வாங்குவதற்கு உலக நாடுகள் பலவும் ஆர்வம் காட்டுகின்றன. 20 நாடுகளில் இருந்து இந்த தடுப்பூசியின் 100 கோடி ‘டோஸ்’களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாக ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரீவ் கூறினார்.

மேலும், 5 நாடுகளில் உள்ள தங்களது கூட்டாளிகள் மூலம் 50 கோடி தடுப்பூசி ‘டோஸ்’கள் தயாரிப்பை உறுதி செய்ய தயாராக உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து உற்பத்தியை மேலும் பெருக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் ரஷியா கொரோனா தடுப்பூசி விஷயத்தில் அவசரம் காட்டுவதாக சர்ச்சை எழுந்தது. இதையொட்டி, உலக சுகாதார நிறுவனம் கூறும்போது, “கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில், சர்வதேச வழிகாட்டுதல்களை ரஷியா பின்பற்ற வேண்டும்” என்று கூறியது. மூன்றாம் கட்ட பரிசோதனைகளை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்ட 6 தடுப்பூசிகளில் ரஷியாவின் தடுப்பூசி இல்லை என தகவல்கள் கூறுகின்றன.


Next Story