நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்யும் சீனா


நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்யும் சீனா
x
தினத்தந்தி 28 Sep 2020 8:32 AM GMT (Updated: 28 Sep 2020 8:32 AM GMT)

நிரூபிக்கப்படாதகொரோனா தடுப்பூசி சோதனை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பீஜிங் 

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நிரூபிக்கப்படாத தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி ரகசியமாக தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3,32,97,503 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,46,29,887 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 02 ஆயிரத்து 137 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது  76 லட்சத்து 65 ஆயிரத்து 479 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 367 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான ஒரு பயனுள்ள தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

சீனாவில், 11 வகையான தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதில் மூன்று தடுப்பூசிகள் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளன. பல நாடுகளில் தானாக முன்வந்து மக்கள் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சீனாவில் குறிப்பிட்ட பொதுமக்களை தேர்வு செய்து அவர்களை கட்டாயப்படுத்தி, ரகசியமாக தடுப்பூசி மருந்துகள் பரிசோதனை நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சீனா  தனது நிரூபிக்கப்படாத தடுப்பூசியை அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், தடுப்பூசி நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், பல்பொருள் அங்காடி ஊழியர்கள் மற்றும் வெளிநாடுகளில் ஆபத்தான பகுதிகளில் பயணிக்கும் மக்களுக்கு செலுத்தத் தொடங்கியுள்ளது.

அவசரகால பயன்பாட்டை மேற்கோளிட்டு, தடுப்பூசிகள் இறுதியில் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை நிரூபிக்கும் என்று கூறி, இன்னும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான திட்டங்களை அதிகாரிகள் வகுத்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிரூபிக்கப்படாத தடுப்பூசிகள் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், ஆஸ்திரேலியாவில் உள்ள முர்டோக் குழந்தைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் குழந்தை மருத்துவரான டாக்டர் கிம் முல்ஹோலண்ட்கூறும் போது எனது கவலை என்னவென்றால், நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது அதை அவர்கள் மறுப்பது கடினம்" என்று கூறினார்.

ஊடகங்களுக்கு எந்தவொரு தகவலையும் வழங்குவதைத் தடுப்பதற்காக தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன்னர் வெளிப்படுத்தாத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நிறுவனங்கள் மக்களை கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

"சீனாவில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் போடப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.  சீன அரசுக்கு சொந்தமான நிறுவனமான சினோபார்ம், அதன் தடுபூசிகளை நூறாயிரக்கணக்கான மக்கள் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளனர்.

சினோவாக்,  பெய்ஜிங்கில் 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அதன் தடுப்பூசி  செலுத்தப்பட்டதாக அடிப்படையிலான நிறுவனம் தெரிவித்துள்ளது. தனித்தனியாக, அதன் அனைத்து ஊழியர்களும் - மொத்தம் சுமார் 3,000 பேர் - மற்றும் அவர்களது குடும்பங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர் என்று அது கூறியது, "என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகள், அரசு நிறுவன ஊழியர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் ஆகியோர், இந்தப் பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம், பரிசோதனை நடத்தப்படுவது குறித்த தகவல்களை வெளியே தெரிவிக்கக் கூடாது என ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்தும் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்த தகவல்களை  சீனா மறுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு ஜூலை மாதத்தில் வழங்கிய ஒப்புதலின்படியே, பரிசோதனைகள் நடக்கின்றன.எந்த விதிமீறலும் இல்லை என சீன தேசிய சுகாதார கமிஷனின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில் கட்டாயப்படுத்தி ரகசியமாக அதுவும் வெளியே பேசக்கூடாது என்று மிரட்டப்பட்டு தடுப்பூசி வழங்கப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Next Story