சீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு : லட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை


சீனாவில்  3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு : லட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை
x
தினத்தந்தி 23 Nov 2020 10:25 PM GMT (Updated: 23 Nov 2020 10:25 PM GMT)

உலகில் முதன் முதலாக தொற்று பாதிப்பு வெளிப்பட்ட சீனாவில், இதுவரை 86 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்,

சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் சுமார் 6 கோடி பேரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. 

சீனாவில் தொற்று முதன் முதலில் பரவினாலும், அந்த நாடு மேற்கொண்ட சிறப்பான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளால் தொற்று பரவல் அந்நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, சீனாவில் இயல்பு வாழ்க்கை மீளத்தொடங்கியது. 

இந்த நிலையில், சீனாவின் தியான்ஜின், ஷாங்காய், மன்சவுலி ஆகிய நகரங்களில் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் இருவருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இந்த மாத துவக்கத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான விமான நிலைய ஊழியருடன்  தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 

தியான் ஜின் நகரில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நகரைச் சேர்ந்த 22 லட்சம் பேருக்கு கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.  மன்சவுலி நகரில் இரண்டு பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து,   அந்த நகரத்தில் வசிக்கும் 2 லட்சம் பேருக்கும் தொற்று பரிசோதானை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரவி விடாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளும் மேற்கூறிய நகரங்களில் கொண்டு வரப்பட்டுள்ளன.

Next Story