அமீரகம்-இஸ்ரேல் இடையே விசா இன்றி பயணம்: இஸ்ரேல் மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது


அமீரகம்-இஸ்ரேல் இடையே விசா இன்றி பயணம்: இஸ்ரேல் மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது
x
தினத்தந்தி 23 Nov 2020 11:09 PM GMT (Updated: 23 Nov 2020 11:09 PM GMT)

அமீரகம்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே குடிமக்கள் விசா இல்லாமல் பயணம் செய்யும் வகையிலான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் நாட்டின் மந்திரி சபை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் 90 நாட்கள் வரை விசா இல்லாமல் இருநாட்டு குடிமக்களும் தங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல் அவிவ்,

அமீரகம்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே குடிமக்கள் விசா இல்லாமல் பயணம் செய்யும் வகையிலான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் நாட்டின் மந்திரி சபை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் 90 நாட்கள் வரை விசா இல்லாமல் இருநாட்டு குடிமக்களும் தங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகம்-இஸ்ரேல் இடையே வர்த்தக ரீதியிலான வாரத்திற்கு 28 பயணிகள் விமானங்களை இயக்க இருதரப்பில் கடந்த அக்டோபர் மாதம் முடிவு செய்யப்பட்டது. இதில் இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரமான டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து துபாய் மற்றும் அபுதாபி இடையே பயணிகள் விமான போக்குவரத்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி அபுதாபியில் இருந்து இஸ்ரேலுக்கு சென்ற எதிகாத் பயணிகள் விமானம் பென் குரியன் விமான நிலையத்தில் முதல் முறையாக தரையிறங்கியது. பின்னர் அங்கிருந்து சுற்றுலாத்துறை பிரதிநிதிகளை 2 நாள் அமீரக சுற்றுப்பயணத்திற்கு அழைத்துக்கொண்டு அபுதாபி திரும்பியது.

இந்த நிகழ்வுகளுக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையே பயணிகள் விமான போக்குவரத்து குறித்து முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அக்டோபர் மாதத்தில் கையெழுத்தான 4 ஒப்பந்தங்களின் ஒன்றில் இருநாட்டு குடிமக்களும் அமீரகம்-இஸ்ரேல் இடையே விசா இன்றி பயணம் செய்ய பிரத்தியேக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஒப்பந்தம் மந்திரிசபை கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக 90 நாட்கள் வரை இருநாட்டு குடிமக்களுக்கு விசா இன்றி தங்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ கூறும்போது, “நாங்கள் இஸ்ரேல்-அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே விசா இல்லாமல் பயணம் செய்யும் ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளோம். இது சுற்றுலா மற்றும் பொருளாதாரத்துறைகளை இருதரப்பிலும் வளர்ச்சியடைய செய்வதாக இருக்கும்” என தெரிவித்தார்.

அமீரகத்தில் கடந்த 1-ந் தேதி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்காக மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story