இத்தாலியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய துரித உணவுக் கடை கண்டுபிடிப்பு


இத்தாலியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய துரித உணவுக் கடை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2020 8:34 AM GMT (Updated: 27 Dec 2020 8:34 AM GMT)

இத்தாலியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாம்பேயி நகர துரித உணவுக் கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரோம், 

கிபி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. அதில் வெளிப்பட்ட எரிமலைக் குழம்பில் பாம்பேயி நகரம் மூழ்கிப் போனது. மண்ணுக்குள் புதைந்து போன இத்தாலி நாட்டின் பாம்பெயி நகரத்தில் தெருவோர துரித உணவகம் செயல்பட்டத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் மூலம் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். 

ரோமாபுரி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வழிப்போக்கர்களுக்காக இந்த உணவகம் இயங்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள். இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஓவியத்தில் காணப்படும் படங்கள், இந்த துரித உணவகத்தில் வழங்கப்பட்ட உணவுகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. சூடான உணவு பொருட்களை விற்பனை செய்யும் உணவகமாக இது இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பன்றி இறைச்சி, மீன், நத்தை, மாட்டிறைச்சி போன்ற இறைச்சிகள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாத்திரங்களில் காணப்படுகின்றன.

'டெர்மோபோலியம்' என்றழைக்கப்படும் இந்த துரித உணவகத்தில், மக்களுக்குச் சூடான உணவு வகைகள் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும், சுமார் 2000 ஆண்டுகள் பழமையான சுடுமண் கூஜாவில் கடையின் உரிமையாளர் உணவை வைத்துள்ளதையும் இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

உணவகத்தின் முகப்பில் வண்ண நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோழி மற்றும் வாத்தின் படங்களும் வரையப்பட்டுள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட உணவுகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முதன்முறையாக முழுமையான ஒரு உணவகத்தை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர் .

இத்தாலியின் நாபொலி நகரில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பாம்பெயி பகுதி எரிமலை வெடித்து சிதறிய சாம்பலினால் மண்ணுக்குள் புதைந்த போது சுமார் 13000 பேருக்கு வசிப்பிடமாக இருந்துள்ளது. இந்த துரித உணவகத்தை அடுத்த ஆண்டு, மக்களின் பார்வைக்கு திறந்துவிட இருக்கிறார்கள்.

எரிமலைச் சாம்பலில் புதைந்து கிடக்கும் பாம்பேயி நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி, இன்னும் ஆராய்ச்சி செய்யப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story