கொரோனா நிவாரண நிதிக்கு 66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க டிரம்ப் ஒப்புதல்


கொரோனா நிவாரண நிதிக்கு 66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க டிரம்ப் ஒப்புதல்
x
தினத்தந்தி 28 Dec 2020 8:42 AM GMT (Updated: 28 Dec 2020 8:42 AM GMT)

கொரோனா நிவாரண நிதிக்கு 66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார்.


வாஷிங்டன்

உலக அளவில் கொரோனா வைரஸ்  பாதிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு அமெரிக்கா. அந்நாட்டில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, இது தொடர்பான கொரோனா நிவாரண மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டால் தான் அது சட்டமாக்கப்பட்டு, கொரோனா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கப்படும். ஆனால், இந்த மசோதாவில் அமெரிக்கர்களுக்கு குறைவான உதவியே கிடைக்கிப்பதாகவும், வெளிநாடுகளே அதிக பலனடைவதாகவும் கூறி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க டிரம்ப் மறுத்து வருகிறார்.

மேலும், கொரோனா நிவாரணமாக அமெரிக்கர்களுக்கு தலா 600 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 44 ஆயிரம்) வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டிருப்பதை 2 ஆயிரம்  டாலராக (சுமார் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம்) அதிகரிக்கும்படியும் டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளார். இதனால், கொரோனா நிவாரண மசோதா சட்டமாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஜோ பைடன் டொனால்ட் டிரம்ப் "பொறுப்பைக் கைவிடுவதாக" குற்றம் சாட்டியதோடு, நிலுவையில் உள்ளகொரோனா நிவாரண மசோதாவில் உடனடியாக கையெழுத்திட டிரம்பிற்கு அழுத்தம் கொடுத்தார். ஜோ பைனின் டுவீட்டிற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி டிரம்ப்  கொரோனா வைரஸ் நிவாரணம் மற்றும் அரசாங்க செலவு மசோதாவில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டார் .

அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவி வழங்கவும், அரசு நிறுவனங்களுக்குப் புத்துயிரூட்டத் தேவையான நிதியை வழங்கவும் 66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான ஆணையில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.

இதனால், நிதியின்றி மூடப்படும் நிலையில் இருந்த அரசுத் துறை நிறுவனங்களுக்குப் புத்துயிரூட்ட பணம் வழங்கப்படும்.

கொரோனா சூழலில் வேலையின்மையால் பாதிக்கப்பட்டோருக்கு பொதுமக்களுக்கும் இழப்பீடும், நிதியுதவியும் வழங்க 66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஒன்றரை லட்ச ரூபாய்  நிதியுதவி வழங்க வேண்டும் எனக் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்தது குறிப்பிடத் தக்கது. 


Next Story