நேபாள அரசியலில் குழப்பம்; ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சீன உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை


நேபாள அரசியலில் குழப்பம்; ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சீன உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 29 Dec 2020 1:19 AM GMT (Updated: 29 Dec 2020 1:19 AM GMT)

நேபாள அரசியலில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சீன உயர் மட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

காத்மாண்டு, 

நேபாளத்தில், கடந்த சில மாதங்களாக, பிரதமர் கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக, சொந்த கட்சியினரே போர்க்கொடி தூக்கி வந்தனர். கட்சியின் துணைத் தலைவரான பிரசந்தா, பிரதமர் ஒலியை கடுமையாக விமர்சித்து வந்தார்.இந்த சூழலில் சமீபத்தில், பிரதமர் ஒலி தலைமையில் நடந்த மந்திரி கூட்டத்தில், நாடாளுமன்றத்தை கலைக்க, அதிபர் பித்யா தேவி பந்தாரிக்கு, பரிந்துரைக்கப்பட்டது. அதனை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் உத்தரவிட்டார். இந்த முடிவு ஆளும் நேபாள கம்யூனிஸ்டு கட்சியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து பிரசந்தா தலைமையில் நடந்த கூட்டத்தில், கட்சி தலைவர் பதவியிலிருந்து ஒலி நீக்கப்பட்டு, புதிய தலைவராக முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள் நியமிக்கப்பட்டார். இதனால் கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேபாளத்தின் நெருங்கிய கூட்டாளியான சீனா இந்த விவகாரத்தில் தலையிட்டு கட்சியை உடையாமல் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அந்த வகையில் சீன அதிபர் ஜின்பிங் சீன கம்யூனிஸ்டு கட்சியின் சர்வதேச துறையின் துணை மந்திரி குவோ யெஜோ தலைமையில் 4 பேர் கொள்ள உயர்மட்ட குழுவை நேபாளத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த உயர்மட்ட குழு நேற்று தலைநகர் காத்மாண்டுவில் ஆளும் நேபாள கம்யூனிஸ்டு கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரசாந்தாவை நேரில் சந்தித்து பேசியது.

அப்போது நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவு உள்ளிட்ட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் கட்சியின் இரு பிரிவுகளை ஒன்றாக கொண்டு வருவதற்கான சாத்தியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து சீன உயர் மட்ட குழுஆளும் நேபாள கம்யூனிஸ்டு கட்சியின் புதிய தலைவரான மாதவ் குமார் நேபாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.


Next Story