சீனாவின் தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என அறிவிப்பு


சீனாவின் தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது  என அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Dec 2020 6:39 PM GMT (Updated: 30 Dec 2020 6:39 PM GMT)

சீனாவில் அரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனம் உள்பட பல்வேறு மருந்து நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

பீஜிங், 

சீனாவில் உள்ள உகான் நகரில்தான் கடந்த ஆண்டு இதே மாதம் கொரோனா வைரஸ் உருவானது. இப்போது 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளை கொரோனா வைரஸ் பாடாய்ப்படுத்தி வருகிறது. அதே வேளையில் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

சீனாவில் அரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனம் உள்பட பல்வேறு மருந்து நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சினோபார்ம் நிறுவனத்தை பொறுத்தவரையில் நிறுவனத்தின் 2 பிரிவுகள் தனித்தனியாக 2 தடுப்பூசிகளை தயாரித்துள்ளன.

இதில் தலைநகர் பீஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட பிரிவு தயாரித்துள்ள தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 86 சதவீதம் செயல்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் சினோபார்ம் நிறுவனத்தின் உகான் நகர பிரிவு தயாரித்துள்ள தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையை நிறைவு செய்துள்ளது. இதில் அந்த தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சினோபார்ம் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி விட்டபோதிலும், அங்கு இதுவரை எந்த ஒரு தடுப்பூசிக்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story