சீனா: 20 பேருக்கு கொரோனா தொற்று - நகரத்திற்கு ஊரடங்கு அறிவிப்பு


சீனா: 20 பேருக்கு கொரோனா தொற்று - நகரத்திற்கு ஊரடங்கு அறிவிப்பு
x
தினத்தந்தி 29 May 2021 9:09 PM GMT (Updated: 29 May 2021 9:09 PM GMT)

சீனாவில் உள்ள ஒரு நகரத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீஜிங்,

2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் முதல் முறையாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் பாதிப்பு சீனாவில் கட்டுப்படுத்தப்பட்ட போதும் உலகின் பல நாடுகளுக்கு பரவி பெரும் உயிர் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையில், வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்திய சீனா எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனாலும், அவ்வப்போது அந்நாட்டின் சில பகுதிகளில் சிறிய எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் குங்கஹோ நகரில் 1.5 கோடி பேர் வசித்து வருகின்றனர். அந்த நகரில் உள்ள லிவான் மாவட்டத்தில் கடந்த வாரம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து குங்கஹோ நகர் முழுவதும் ஊரங்கு அமல்படுத்தப்பட்டு நகரின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டது. வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

ஊரங்கு காரணமாக வைரஸ் பரவிய பகுதியில் உள்ள பள்ளிகள், சந்தைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. லிவான் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Next Story