வியட்நாமில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு


வியட்நாமில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 30 May 2021 12:36 AM GMT (Updated: 30 May 2021 12:36 AM GMT)

வியட்நாம் நாட்டில் புதிய வகையான உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஹனோய்,

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் இந்த கொரோனா வைரஸ் கிருமியானது வெவ்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்து பரவி வருவதால், நோய் பரவல் வேகமும் அதிகரிக்கிறது.

ஏற்கனவே இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரசின் உருமாற்றம் அடைந்த வகைகள் கண்டறியப்பட்டன. அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமில், தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

வியட்நாம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் அங்கு கொரோனா பரவல் நன்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இதுவரை மொத்தம் 6,856 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 47 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அங்கு உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே வியட்நாமில், 7 விதமான கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருமாறிய கொரோனா குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story