இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலையை நாம் கணிக்க முடியாது-உலக சுகாதார அமைப்பு விளக்கம்


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 30 May 2021 12:26 PM GMT (Updated: 30 May 2021 2:17 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பு மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

ஜெனீவா,

இந்தியாவில் கடந்த 2020- ஆம் ஆண்டு ஜனவரியில் முதன் முதலாக கொரோனா தொற்று பதிவானது. இதையடுத்து, நாடு முழுவதும் மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.  கொரோனா முதல் அலை செப்டம்பர் மாதம் உச்சம் தொட்டது. அப்போது  ஒரு நாள் பாதிப்பு 97,000 என்ற அளவில் இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறைந்தது. 

அதன்பின்னர் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி, கடந்த 6-ம் தேதி அதிகபட்சமாக தினசரி தொற்று எண்ணிக்கை 4.14  லட்சமாக உயர்ந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறைந்து இப்போது 2 லட்சத்திற்கும் கீழ் உள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் தினசரி பாதிப்பு 1.65 லட்சம் என்ற அளவில் இருந்தது. இதுவும்கூட முதல் அலை உச்சத்தில் இருந்ததைவிட அதிகம்தான். 

இதைவிட கொரோனா வைரசின் மூன்றாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், அடுத்த அலையை கணிக்க இயலாது என உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி, சுகாதார சேவைகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாட்டின் சில பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதை பார்க்கிறோம். ஆனாலும், சூழ்நிலை தொடர்ந்து சவாலாகவே உள்ளது.

எனவே, நாம் முதலில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவின் அடுத்த அலையை நாம் கணிக்க முடியாது, ஆனால் அதைத் தடுக்க முடியும். அதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்” என்றார். 

Next Story