சீனாவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே ஊழியர்கள் மீது ரெயில் மோதி 9 பேர் பரிதாப சாவு


சீனாவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே ஊழியர்கள் மீது ரெயில் மோதி 9 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 4 Jun 2021 2:09 PM GMT (Updated: 4 Jun 2021 2:09 PM GMT)

சீனாவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே ஊழியர்கள் மீது ரெயில் மோதிய கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரெயில்வே பராமரிப்பு பணிகள்

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் கான்சூ. இங்குள்ள ஷின்சாங் நகரில் நேற்று ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.‌ 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரெயில் தண்டவாளத்தை குறிப்பிட்ட தூரத்துக்கு மூடி வைத்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.‌ இதற்கிடையில் சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கி நகரிலிருந்து கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள ஹாங்சவ் நகருக்கு பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. ரெயிலில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்தனர். இந்த பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் கான்சூ மாகாணத்தின் ஷின்சாங்‌ நகரை கடந்து ஹாங்சவ் நகருக்கு செல்வது வழக்கம்.‌

ஊழியர்கள் மீது ரெயில் மோதியது

அதன்படி நேற்று அதிகாலை இந்த ரெயில் ஷின்சாங்‌ நகருக்கு வந்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:18 மணி அளவில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்த ரெயில்வே தண்டவாளத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக சென்றது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே ஊழியர்கள் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் ஊழியர்கள் பலர் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். பலர் ரெயில் சக்கரங்களுக்கு இடையில் சிக்கி நசுங்கினர். ஊழியர்கள் மீது மோதிய ரெயில் சிறிது தூரம் சென்ற பிறகே நின்றது. இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. ரெயில்வே ஊழியர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என பலரும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த கோர விபத்தில் ஊழியர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரெயில்வே நிர்வாகத்தின் அலட்சியம்

மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்களில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் என்ன? பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தண்டவாளத்தில் ரெயில் சென்றது எப்படி? என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.‌ இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் ரெயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தாலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக சீன மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.‌

இது எப்படி நடந்திருக்கும்?

சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான வெய்போவில் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘தொழிலாளர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தால் ரெயில் டிரைவர்கள் அதைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் இது எப்படி நடந்திருக்கும்? 9 உயிர்கள் போய்விட்டது. யாருடைய அலட்சியம் இதற்கு காரணம்?’’ என குறிப்பிட்டுள்ளார்.‌


Next Story