சிரியாவில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் - ஐ.நா. சபை தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு


சிரியாவில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் - ஐ.நா. சபை தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு
x
தினத்தந்தி 11 July 2021 11:14 AM GMT (Updated: 11 July 2021 11:14 AM GMT)

சிரியாவில் போர் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெனீவா,

சிரியா நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் உள்நாட்டுப் போர், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை சுமார் 6 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 66 லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், 67 லட்சம் பேர் உள்நாட்டிலேயே தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போர் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்க்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

இந்த வாக்கெடுப்பின் போது உரையாற்றிய இந்திய பிரதிநிதி திருமூர்த்தி, சிரியா துண்டாடப்படாமல் ஒரே நாடாக தொடரச் செயவதன் மூலம் அந்த பிராந்தியத்தில் அரசியல் நிலைத்தன்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்று கூறினார். மேலும் சிரியா பிரச்சினைக்கு ராணுவ ரீதியான தீர்வு சாத்தியமில்லை என்றும் ஐ.நா.வின் வழிகாட்டுதலில் சிரியா அரசின் தலைமையில் முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வு தான் சரியாக இருக்கும் என்று இந்தியா கருதுவதாகவும் திருமூர்த்தி தெரிவித்தார்.

தற்போது சிரியாவில் சுமார் 1.3 கோடி மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். மேலும் சிரியாவில் வடமேற்கு பகுதியில் மட்டும் கவனம் செலுத்தாமல் அனைத்து பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதாக திருமூர்த்தி தனது உரையில் தெரிவித்துள்ளார். 

Next Story