வடகொரியா மீண்டும் அணுஆயுத பேச்சுவார்த்தைக்கு திரும்புமா? சம்மதிக்க வைக்க அமெரிக்கா, தென்கொரியா ஒப்புக்கொண்டன


வடகொரியா மீண்டும் அணுஆயுத பேச்சுவார்த்தைக்கு திரும்புமா? சம்மதிக்க வைக்க அமெரிக்கா, தென்கொரியா ஒப்புக்கொண்டன
x
தினத்தந்தி 22 July 2021 9:11 PM GMT (Updated: 22 July 2021 9:11 PM GMT)

வடகொரியாவை மீண்டும் அணு ஆயுத தவிர்ப்பு பேச்சு வார்த்தைக்கு திரும்ப வைக்க அமெரிக்காவும், தென்கொரியாவும் ஒப்புக்கொண்டன.

வடகொரியா அணு ஆயுத சோதனைகள்
ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களை சோதித்து வந்தது. கூடவே, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரிசோதித்து வந்தது.இதற்காக அந்த நாட்டின் மீது ஐ.நா.சபையும், அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.இதன் காரணமாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நேரடி பகை மூண்டது. இந்த நிலையில் தென்கொரியாவின் சமரச முயற்சியால், இவ்விரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இறங்கி வந்தன.

2 சந்திப்புகள்
கடந்த 2018-ம் ஆண்டு, ஜூன் மாதம் 12-ந் தேதி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சிங்கப்பூரில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை முதன்முதலாக சந்தித்து பேசினார்.இரு துருவங்களாக திகழ்ந்த இந்த தலைவர்கள் சந்தித்துப்பேசியது உலகையே வியப்பில் ஆழ்த்தியது. திரும்பிப்பார்க்கவும் வைத்தது.அந்த சந்திப்பின்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டனர்.ஆனால் அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் 27, 28 தேதிகளில் வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில் இவ்விரு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது. அதன்பின்னர் அமெரிக்காவும், வடகொரியாவும் பேசவே இல்லை.வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளில் ஒருசிலவற்றையாவது நீக்க வேண்டும் என்று கிம் ஜாங் அன் வலியுறுத்தி, அதற்கு டிரம்ப் இணங்காததே இந்த பேச்சுவார்த்தை முறிவுக்கு காரணம் என 
கூறப்பட்டது.

ஜோ பைடன் முயற்சி
இப்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். அவர் வடகொரியாவுடன் மீண்டும் அணு ஆயுத தவிர்ப்பு பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார். இதற்கான முயற்சியை ராஜதந்திர ரீதியில் அவர் மேற்கொண்டார். ஆனால் இதற்கு வடகொரியா பிடி கொடுக்கவில்லை.கடந்த மாதம், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி, அமெரிக்காவுடன் அணு ஆயுத தவிர்ப்பு பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை நிராகரித்து விட்டார்.

அமெரிக்கா, தென்கொரியா ஒப்புதல்
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு துணை மந்திரி வெண்டி ஷெர்மன் தென்கொரியாவின் தலைநகரமான சியோலுக்கு சென்றுள்ளார்.அவர் நேற்று தென்கொரிய வெளியுறவு மந்திரி சுங் யூ யோங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் வடகொரியா விவகாரம் மற்றும் பிற பிராந்திய விவகாரங்கள் முக்கிய இடம் பிடித்தன.இந்தப் பேச்சுவார்த்தையின்போது இரு தலைவர்களும், வடகொரியாவை மீண்டும் அணு ஆயுத தவிர்ப்பு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வைக்க நெருக்கமான ஆலோசனைகளை தொடர்வது என்று முடிவு எடுத்தனர்.கொரிய தீபகற்பத்தில் 
முழுமையாக அணு ஆயுதங்களை விலக்கி, நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கு வடகொரியா மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப சம்மதிக்க வைக்க வேண்டும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதை தென்கொரிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. வடகொரியா இறங்கி வருமா என்பது இப்போது சர்வதேச எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.

Next Story