பீஜிங் மாரத்தான் காலவரையின்றி ஒத்திவைப்பு


பீஜிங் மாரத்தான் காலவரையின்றி ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 25 Oct 2021 6:17 PM GMT (Updated: 25 Oct 2021 6:17 PM GMT)

பீஜிங் மாரத்தான் வருகிற 31-ந்தேதி நடைபெற இருந்தது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மாரத்தான் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நாட்டின் 11 மாகாணங்களில் 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தரப்பு கூறியுள்ளது.அவர்கள் அனைவருமே டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட நான்ஜிங் கொரோனா பரவலுக்கு பிறகு இது தான் மிக பெரிய பரவலாக கருதப்படுகிறது.

மேலும் வரக்கூடிய நாட்களில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், பீஜிங் மாரத்தான் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கடந்த 1981-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் பீஜிங் மாரத்தான் நடத்தப்பட்டு வருகிறது. இது சீனாவின் மிகப்பெரிய உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த மாரத்தான் பாரம்பரியமாக தியானென்மென் சதுக்கத்தில் தொடங்கி, பீஜிங் ஒலிம்பிக் பூங்காவிலுள்ள கொண்டாட்ட சதுக்கத்தில் நிறைவடையும்.இந்த ஆண்டுக்கான பீஜிங் மாரத்தான் வருகிற 31-ந்தேதி நடைபெற இருந்தது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மாரத்தான் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story