ரஷ்யாவில் புதிதாக 39,165 பேருக்கு கொரோனா: ஒரேநாளில் 1,179 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Nov 2021 5:53 PM GMT (Updated: 7 Nov 2021 5:53 PM GMT)

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,165 பேருக்கு கொரோனா பாதிபு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. உலக அளவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடாக தன்னை ரஷ்யா அறிவித்துக்கொண்டது. எனினும், ரஷ்யாவில் பல்வேறு காரணங்களால் தடுப்பூசி போடப்படும் பணி மந்தமாகவே உள்ளது.  

செப்டம்பர் மாத மத்தியில் இருந்தே ரஷ்யாவில் தொற்று பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. தொற்று பரவல் அதிகரிப்பால் அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை பெரும்பாலான பணியாளர்களுக்கு விடுப்பு அளித்து புதின் உத்தரவிட்டார். அதேபோல், பிராந்திய அரசுகளும் தேவைப்பட்டால் பணிகள் அல்லாத நாளை நீட்டிக்கலாம் என்று புதின் அறிவுறுத்தியுள்ளார். 

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 25.05 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 50.63 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 87,95,095 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,179 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 814 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 75,61,978 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 9,86,303 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story