ஆஸ்திரியாவில் ஈரானின் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது


ஆஸ்திரியாவில் ஈரானின் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது
x
தினத்தந்தி 29 Nov 2021 10:15 PM GMT (Updated: 29 Nov 2021 10:15 PM GMT)

ஆஸ்திரியாவில் ஈரானின் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது.

வியன்னா,

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு விலகியது. அத்துடன் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதையடுத்து ஈரானும் தன் பங்குக்கு படிப்படியாகவும், பகிரங்கமாகவும் தனது அணுசக்தி ஒப்பந்த வரம்புகளை கைவிட்டது. இதன் காரணமாக அணுசக்தி ஒப்பந்தம் நீர்த்து போகும் அபாயம் உருவானது.

எனவே அணுசக்தி ஒப்பந்தத்தை தக்க வைப்பது தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத மற்ற 6 நாடுகளும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கின. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் அதிபர் தேர்தலை காரணம் காட்டி கடந்த ஜூன் மாதம் ஈரான் இந்த பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தியது. அதோடு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்பாமல் ஈரான் போக்கு காட்டி வந்தது.

இந்தநிலையில் பல மாத இழுபறிகளுக்கு பின்னர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இதில் ஈரான், ரஷியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனை களுக்கு ஈரானை இணங்க செய்வதற்கும், அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்குமான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story