உக்ரைனில் நீடிக்கும் ரஷியாவின் தாக்குதல்: ஏப்ரல் 1ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை..!!


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 31 March 2022 12:29 AM GMT (Updated: 31 March 2022 12:29 AM GMT)

உக்ரைனுடன் முன்னதாக நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று ரஷிய அதிபர் மாளிகை அறிவித்திருந்தது.

மாஸ்கோ, 

40 லட்சம் உக்ரைனிய மக்களை அண்டை நாடுகளில் அகதிகளாக்கியுள்ள உக்ரைன் மீதான ரஷிய போர் முடிவுக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு நேற்று முன்தினம் ஏற்பட்டது.

இதற்கு காரணம் அன்றைய தினம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் நேரடி சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றதும், இதில் உக்ரைன் தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரப்படும் பட்சத்தில் நடுநிலை வகிக்க தயார் என கூறியதும், ரஷிய துணை ராணுவ மந்திரி அலெக்சாண்டர் போமின், கீவ் மற்றும் செர்னிஹிவ் பகுதிகளில் போர் நடவடிக்கைகளை வெகுவாக குறைக்கும் முடிவை ரஷியா எடுத்துள்ளது என அறிவித்ததும் ஆகும்.

ஆனால் அதன் பின்னர் காட்சிகள் மாறி விட்டன. உக்ரைனுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ரஷிய அதிபர் மாளிகை நேற்று தெளிவுபட அறிவித்தது. இதுபற்றி அதிபர் மாளிகையின் செய்திதொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, “உக்ரைன் எழுத்துப்பூர்வமான முன்மொழிவுகளை சமர்ப்பித்தது சாதகமான அம்சம் ஆகும். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, உறுதியான எதையும் எட்டவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

இதேபோன்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “தலைநகரான கீவிலும், வடக்கு நகரமான செர்னிஹிவிலும் ராணுவ நடவடிக்கைகளை ரஷியா குறைக்கும் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை” என்று கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் தாக்குதலை வெகுவாக குறைப்போம் என்ற ரஷிய துணை ராணுவ மந்திரி அறிவிப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனும், “இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றி கவனத்தை திசை திருப்ப ரஷியாவின் முயற்சி” என கூறினார்.

ரஷிய துருப்புகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கும் நிலையில் உக்ரைனுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்க விரும்புவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உக்ரைனில் போரிடுவதற்கு ரஷியா கூலிப்படைகளை நம்பி இருப்பது அதிகரித்து வருவது, போரில் ரஷிய படைவீரர்கள் ஏராளமாக பலியாகி இருப்பதற்கான அடையாளம் என்றும் இங்கிலாந்து கூறுகிறது.

எனவே நேற்று முன்தினம் இரவு முதல் தாக்குதல் தொடர்கிறது.

நேற்று கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்கில் உள்ள குடியிருப்பு மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் படுகாயம் அடைந்தனர் என்று டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் பிராந்திய பாதுகாப்பு தலைமையகம் தெரிவித்தது.

ஆனால் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மரியிங்கா, நவோமிகயில்வ்கா நகரங்களில் ரஷியா தாக்குதல் நடத்தியதாக பிராந்திய கவர்னர் பாவ்லோ கிரைலெங்கோ தெரிவித்தார். இந்த பிராந்தியத்தை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக ரஷியா தாக்குதலை கடுமையாக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடக்கு நகரமான செர்னிஹிவில் நேற்று முன்தினம் இரவிலும் தாக்குதல் தொடர்ந்தது. நேற்று காலையும் இது நீடித்தது.

இந்த தாக்குதல்களில் வீடுகள், நூலகங்கள், ஷாப்பிங் மையங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளதாக மாகாண கவர்னர் வயாசேஸ்லாவ் சாஸ் தெரிவித்தார். “செர்னிஹிவ் நகரில் தாக்குதல் குறைக்கப்படும் என்ற ரஷியாவின் அறிக்கையை நிச்சயமாக நாங்கள் நம்பவில்லை” என்றும் அவர் கூறினார்.

மரியுபோல் நகரமும், இர்பின் நகரமும் ரஷிய படைகளால் முற்றிலுமாக அழிக்கப்படுகிற செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி அதிர வைத்துள்ளன. மத்திய மரியுபோல் நகரில் முழு நகரமும் அழிக்கப்பட்டுள்ளதாக சி.என்.என். தெரிவித்தது. இன்னும் மரியுபோல் நகரில் 1.60 லட்சம் மக்கள் தவிக்கின்றனர். இந்த நகரில் உக்ரைன் படையினர் சரண் அடைந்தால் மட்டுமே தாக்குதல்கள் முடிவுக்கு வரும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரானிடம் ரஷிய அதிபர் புதின் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் திட்டத்தை பரிசீலிக்க ரஷிய அதிபர் புதின் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு மத்தியில் தெற்கு உக்ரைன் துறைமுக நகரான மைகோலாய்வ் நகரில் அரசு கட்டிடம் மீது, ரஷியா நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் துருக்கியில் ரஷியா - உக்ரைன் இடையே ஏப்ரல் 1 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. மார்ச் 30ஆம் தேதியன்று துருக்கியில் சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் உக்ரைன் மூத்த அதிகாரி ஒருவர் இந்த தேதியை அறிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story