ஜெர்மனியில் சாலையில் வேன் கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் 7 அகதிகள் உயிரிழப்பு


ஜெர்மனியில் சாலையில் வேன் கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் 7 அகதிகள் உயிரிழப்பு
x

Image Courtesy : AFP

ஜெர்மனியில் சாலையில் வேன் கவிழ்ந்து தீப்பிடித்த சம்பவத்தில் வேனில் இருந்த 7 அகதிகள் உயிரிழந்தனர்.

பெர்லின்,

ஜெர்மனியில் முனிச் நகரின் கிழக்கு பகுதியில் முஹல்டோர்ப் என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று காலை வேன் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள போலீஸ் சோதனை சாவடியில் இருந்த போலீசார் வேனை சோதனைக்காக நிறுத்தும்படி கூறினார். ஆனால் டிரைவர் வேனை நிறுத்தாமல் போலீஸ் சோதனை சாவடியை வேகமாக கடந்து செல்ல முயன்றார்.

இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. அதை தொடர்ந்து வேன் தீப்பிடித்து எரிந்தது. சற்று நேரத்தில் வேன் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பாலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வேனில் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 20 அகதிகள் இருந்ததாகவும், அவர்கள் சட்டவிரோதமாக ஆஸ்திரியா நாட்டுக்கு செல்ல முயன்றபோது இந்த விபத்து நேரிட்டதும் தெரியவந்தது. அதே சமயம் அகதிகள் அனைவரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story