துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்தது


துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்தது
x

கோப்புப்படம்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை தற்போது 47 ஆயிரத்தை கடந்துள்ளது.

அங்காரா,

துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின.

இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியா வரை நீண்டது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

இந்நிலையில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி துருக்கியில் இதுவரை நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43.556 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை தற்போது 47,244 ஆக அதிகரித்துள்ளது.


Next Story