தோஷகானா வழக்கு; பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கு ஜாமீன்


தோஷகானா வழக்கு; பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கு ஜாமீன்
x
தினத்தந்தி 29 Aug 2023 5:09 PM GMT (Updated: 30 Aug 2023 1:02 AM GMT)

பாகிஸ்தானில் தோஷகானா வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி பூஷ்ரா பீபிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

லாகூர்,

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரான அவருக்கு எதிராக கடந்த ஆண்டு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தன.

அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அவரே காரணம் என கூறின. தொடர்ந்து, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் தோல்வியை தழுவினார்.

இதனால், அவர் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதன்பின்னர் ஷபாஸ் ஷெரீப் பிரதமரானதும், இம்ரான் கான் தனது பதவி காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.

அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவாகின. இதேபோன்று இம்ரான் கானின் மனைவி பூஷ்ரா பீவிக்கு எதிராகவும் தோஷகானா வழக்கு பதிவானது. அரசு துறைக்கு பரிசாக கிடைத்த சங்கிலி, காதணி, இரண்டு மோதிரங்கள் மற்றும் பிரேஸ்லட் உள்பட பல பொருட்களை பீபி தன்னுடன் வைத்து கொண்டார்.

அவர் தங்கம், வைரங்கள், நெக்லஸ் மற்றும் பிரேஸ்லெட் ஆகியவற்றையும் வைத்து கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அவற்றின் விலை மதிப்பை கணக்கிட அரசு துறையிடம் அவை ஒப்படைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் பீபி, இஸ்லாமாபாத் நகரில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி அபுல் ஹஸ்னத் முகமது ஜுலாகர்னைன், பீபிக்கு வருகிற செப்டம்பர் 12-ந்தேதி வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதேபோன்று, இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு இன்று சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு இருந்தது.


Next Story