சிறையில் என் கணவர் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் - இம்ரான் கான் மனைவி அச்சம்


சிறையில் என் கணவர் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் - இம்ரான் கான் மனைவி அச்சம்
x
தினத்தந்தி 19 Aug 2023 10:10 AM GMT (Updated: 19 Aug 2023 10:25 AM GMT)

சிறையில் என் கணவர் கொலை செய்யப்படலாம் என அச்சம் உள்ளதாக இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீபி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, சிறையில் உள்ள தனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். அட்டாக் சிறையில் தனது கணவர் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் என கூறி உள்ளார்.

இது குறித்து புஷ்ரா பீபி பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

எந்தவித நியாயமும் இல்லாமல் எனது கணவர் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டத்தின்படி, என் கணவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும்.

ஆக்ஸ்போர்டில் படித்தவர் மற்றும் நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பதால் அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு சிறையில் பி-கிளாஸ் வசதிகளை வழங்க வேண்டும்.

எனது கணவர் மீது கடந்த காலங்களில் இரண்டு படுகொலை முயற்சிகள் நடந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

அவரது (கான்) உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளது. என் கணவர் அட்டாக் சிறையில் விஷம் வைத்து கொலை செய்யப்படுவார் என்ற அச்சம் உள்ளது. நாட்டின் முன்னாள் பிரதமர் என்பதால், எனது கணவர், வீட்டில் சமைத்த உணவை சிறையில் சாப்பிட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story