பாகிஸ்தான் பகுதிக்குள் ஈரான் மீண்டும் தாக்குதல்.. ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்க தளபதி பலியானதாக தகவல்


பாகிஸ்தான் பகுதிக்குள் ஈரான் மீண்டும் தாக்குதல்.. ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்க தளபதி பலியானதாக தகவல்
x

2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கம் அடிக்கடி ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் செயல்படும் ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கத்தினரை குறிவைத்து ஈரான் ராணுவம் கடந்த மாதம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானின் தென்கிழக்கு பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் அமைதி திரும்பியது.

இந்த நிலையில் ஈரான் ராணுவம் மீண்டும் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கத்தின் தளபதி இஸ்மாயில் ஷாபக்ஷ் மற்றும் சிலர் கொல்லப்பட்டதாக, ஈரான் அரசு ஊடக தகவலை மேற்கோள் காட்டி ஈரான் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் ஈரான்-பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கம் அடிக்கடி ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையில் ஈரான் படைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈரானின் தென்கிழக்கு மாகாணத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் அந்த இயக்கத்தை பயங்கரவாத குழுவாக ஈரான் அறிவித்துள்ளது.


Next Story