ஈரானை தாக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே... காசாவை தாக்கிய இஸ்ரேல்


ஈரானை தாக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே... காசாவை தாக்கிய இஸ்ரேல்
x
தினத்தந்தி 16 April 2024 1:32 AM GMT (Updated: 16 April 2024 6:50 AM GMT)

ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் சிக்கியபோதும், காசாவில் உள்ள பணய கைதிகளை மீட்கும் முக்கிய பணியை விட்டுவிடவில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் ஹகாரி கூறியுள்ளார்.

காசா,

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது. 2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது.

இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும், இதனை இஸ்ரேல் முறியடித்து உள்ளது. இந்நிலையில், காசாவில் இருந்து தரைவழி படைகள் பெருமளவில் வாபஸ் பெற்று ஒரு வாரம் ஆன நிலையில், அதிரடி நடவடிக்கைகளுக்காக பிரிகேடியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் அழைக்கப்பட்டு உள்ளனர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் அரசின் ஊடக அலுவலகம் வெளியிட்ட செய்தியில், இஸ்ரேல் நாட்டின் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் மத்திய காசா பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி உள்ளன. இதில், பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

நசீரத் அகதி முகாம் மீது, மத்திய மற்றும் வடக்கு காசாவின் பிற பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்து வரும் சூழலில், காசாவில் தன்னுடைய தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் சிக்கி உள்ளபோதும், காசாவில் உள்ள எங்களுடைய பணய கைதிகளை மீட்கும் எங்களுடைய முக்கிய பணியை நாங்கள் விட்டுவிடவில்லை. அதில் இருந்து எங்கள் பார்வையை விலக்கவில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதில், 130 பேரில் 34 பேர் உயிரிழந்து உள்ளனர். மீதமுள்ளோரை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு ஆலோசகரான ஜான் கிர்பை கூறும்போது, இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான மத்தியஸ்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என கூறியுள்ளார். பேச்சுவார்த்தைக்கான வழிகள் இன்னும் மரணித்து விடவில்லை என்றும் கூறியுள்ளார்.

புதிய ஒப்பந்தங்கள் நடைபெற உள்ளன. இதனால், சில பணய கைதிகள் விடுவிக்கப்பட கூடும். போர்நிறுத்தம் ஏற்படும். காசாவில் மனிதாபிமானம் சார்ந்த நிவாரணம் அதிக அளவில் கிடைக்க பெறும் என்று கூறியுள்ளார்.

காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ் பெறுவதுடன், நிரந்தர போர்நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.


Next Story