அமெரிக்கா: பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவரை சுட்டு கொன்ற போலீசார்


அமெரிக்கா:  பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவரை சுட்டு கொன்ற போலீசார்
x

அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் மாணவர் வந்த சம்பவத்தில் மாணவர்களோ அல்லது பள்ளி ஊழியர்களோ காயமடையவில்லை என்று விஸ்கான்சின் மாகாண அட்டர்னி ஜெனரல் கவுல் கூறியுள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மவுண்ட் ஹாரிப் என்ற பகுதியில் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பள்ளிக்கு ஒரு மாணவன் துப்பாக்கியுடன் வந்துள்ளான்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக செயல்பட்ட போலீசார் அந்த மாணவன் பள்ளிக்குள் நுழைவதற்குள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டனர். இதில், அந்த மாணவன் உயிரிழந்து விட்டான். இதனை தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

எனினும், இந்த அச்சுறுத்தலான சம்பவத்தின்போது, வேறு மாணவர்களோ அல்லது காவல் அதிகாரிகளோ காயமடையவில்லை என விஸ்கான்சின் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் ஜோஷ் கவுல் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது கூறினார்.

அந்த மாணவனின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால், இளவயது ஆண் என அடையாளம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்திருக்கிறான். அந்த மாணவன் பயன்படுத்திய ஆயுதமும் எந்த வகையானது என தெரிய வரவில்லை.

போலீசார் சுட்டபோது, பதிலுக்கு அந்த மாணவன் துப்பாக்கியால் சுட்டானா? என்ற விவரங்கள் எதுவும் தெரிய வரவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றது. அனைத்து மாணவர்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதில், மாணவர்களோ அல்லது பள்ளி ஊழியர்களோ காயமடையவில்லை என்று கவுல் கூறியுள்ளார். பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக பெற்றோரிடம் கொண்டு சேர்க்கும் பணியானது நேற்றிரவும் தொடர்ந்தது என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story