3. திருப்பாவை - திருவெம்பாவை


3. திருப்பாவை - திருவெம்பாவை
x
தினத்தந்தி 17 Dec 2016 10:56 PM GMT (Updated: 17 Dec 2016 10:56 PM GMT)

திருப்பாவை ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்குஇன்றி நாடு எல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்குபெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கு இருந்து சீர்த்த

திருப்பாவை

ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்குஇன்றி நாடு எல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம்நிறைக்கும் வள்ளற் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!


மூன்று உலகங்களையும் தனது திருவடியாலே அளந்து மாபலியின் செருக்கை அறுத்தவன். வாமன உருவில் அவதரித்தவன்¢. அவனது திருப்பெயர்களைப் போற்றிப் பாடி, மலர்தூவி வழிபடுவதற்கு முன்பு நாம் நீராடச் செல்வோம். இவ்வாறு நாம் நீராடிய பின் பாவை நோன்பு மேற்கொள்வதால், மாதம் மூன்றுமுறை மழை பொழியும். அதனால் வயல்களில் செந்நெல் விண்ணளவு உயர்ந்து வளரும். அந்த நெற்பயிர்களிடையே மீன்கள் துள்ளி விளையாடும், வயல் வெளிகளில் உள்ள அழகிய குவளை மலர்களில் வண்டினங்கள் தன் துணையுடன் தேன்குடித்துப் பின் உறங்கும். அளவற்று வள்ளல்போல் பசுக்கள் பாலைத் தரும். இத்தகைய
சிறப்புக்களை உடைய பாவை நோன்பினைச் செய்ய நீராட வாருங்கள் பெண்களே!

திருவெம்பாவை

முத்துஅன்ன வெண்நகையாய் முன்வந்து எதிரெழுந்துஎன்
அத்தன் ஆனந்தன் அமுதன்என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துஉன் கடைதிறவாய்
பத்துஉடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குஉடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்குஏலோர் எம்பாவாய்


முத்துநகை உடையவளே! எங்களுக்கு முன்பே எழுந்து எங்கள் முன் நின்று ஆண்டவனை தந்தை என்றும், மகிழ்ச்சி தருபவன் என்றும், இனிப்பானவன் என்றும் வாயினிக்க வாழ்த்துவாய். ஆனால் இப்போது தூக்கம் கலைக்காமல், கதவைத் திறவாமல் இருக்கின்றாய். இறைவன் மீது நீங்காத பற்றுக் கொண்டவர்கள் பழைய அடியார்கள். நாங்களோ புதியவர்கள். ஏதேனும் தவறிழைத்திருந்தால் பொறுத்து எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள். உன் அன்பு எத்தகையது என்பது எங்களுக்குத் தெரியாதா? சிவனை எவ்வாறு சிவநெஞ்சர் பாடாமலிருப்பர்? இதனையேற்று நீ பாடவேண்டும்.

Next Story