குடும்ப விருத்தியைத்தரும் குரு வார விரதம்!


குடும்ப விருத்தியைத்தரும் குரு வார  விரதம்!
x
தினத்தந்தி 22 Dec 2016 7:01 AM GMT (Updated: 22 Dec 2016 7:01 AM GMT)

எந்தவொரு மனிதனும் குருவருள் இருந்தால் தான் திருவருளைப் பெறமுடியும். அதனால் தான் 'குருவருளும், திருவருளும் துணை' என்று முன்னோர்கள் எழுதுவது வழக்கம். இதிலிருந்தே நாம் குரு வழிபாட்டின் முக்கியத்துவத்தை அறிந்து

ந்தவொரு மனிதனும் குருவருள் இருந்தால் தான் திருவருளைப் பெறமுடியும். அதனால் தான் 'குருவருளும், திருவருளும் துணை' என்று முன்னோர்கள் எழுதுவது வழக்கம். இதிலிருந்தே நாம் குரு வழிபாட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக எத்தனையோ விரதங்கள் இருக்கின்றன. உடலும், உள்ளமும் நலம்பெறுவதற்குத்தான் விரதங்களை முன்னோர்கள் கடைப்பிடித்திருக்கின்றனர். விரதத்தை விஞ்ஞானமும், மெஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த விரதங்களில் எல்லாம் மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த குரு வார விரதமாகும். குடும்பத்தில் விருத்தியம்சம் கூட, வெற்றிகள் உருவாக, கல்வி நலன் கூட, கல்யாணம் அமைய, புத்திரப்பேறு கிட்ட, புகழ்பெருக, ஆயுள் அதிகரிக்க, ஆன்மிகப் பயணம் தொடர, பேச்சாற்றல் அதிகரிக்க என எல்லா வகையான கோரிக்கைகளையும் ஒருசேர நிறைவேற்றக் கூடிய உன்னதமான விரதம் தான் குரு வார விரதம் எனப்படும் வியாழக்கிழமை விரதமாகும்.

ஒருவருடைய ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களில் எந்தக் கிரகம் வலிமை இழந்திருந்தாலும் கவலைப்பட வேண்     டியதில்லை. அந்தக் கிரகங்களின் மீது குருவின்  பார்வை பட்டாலே பலன் அதிகம் கிடைக்கும். அந்தக் கிரகங்கள் நமக்கு நற்பலன் வழங்க ஏதுவாக அமையும். நவக்கிரகத்தில் குருவை 'சுப கிரகம்' என்று அழைப்பது வழக்கம். இவரை 'வியாழ பகவான்' என்றும் அழைப்பதுண்டு. தேவர்களின் குருவாக அமைந்தவர் என்பதால் தான் குரு பகவான் என்று அழைக்கின்றோம்.

குரு பகவான் காசிக்குச் சென்று சிவலிங்கத்தை நிறுவிப் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்து வந்தார். இவருடைய தவத்தை மெச்சி சிவபெருமான் இவருக்கு கிரக பதவி அளித்து இந்திரனுக்கு குருவாக விளங்கும்படி அருள்பாலித்தார். இவர் பூஜை செய்த சிவலிங்கத்தை இன்றும் காசியில் காண இயலும்.

கிரகங்களின் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான் சாத்வீக குணம் கொண்டவர். மஞ்சள் நிறம் ஏற்றது. அதனால் தான் 'பொன்னவன்' என்று அழைத்தார்கள்.  ருத்திராட்ச மாலை அணிவித்து, கையில் ஞான முத்திரைகாட்டி, கமண்டலமும், யோக தண்டமுமாக சாத்வீக உருவில் காட்சியளிப்பவர்.

இந்த விரதம் அனைவருக்குமே ஏற்றது. முக்கியமாக வியாழக்கிழமை பிறந்தவர்கள், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தனுசு, மீன ராசிகளில் பிறந்தவர்கள், 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் ஏற்ற விரதமாகும்.

குரு பகவான் முருகப்பெருமானை பூஜித்து பெரும் பேறு பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே தான் திருச்செந்தூர் குரு தலமாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமான் சூரபத்மனை வென்றதும், குமரகுருபரர் பேச்சாற்றலைப் பெற்றதும் திருச்செந்தூரில் தான். இங்கு முருகப்பெருமானுக்கு, விசாக நட்சத்திரமன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அவருடைய முழுமையான அருளைப்பெற வியாழக்கிழமை குருவார விரதத்தை மேற்கொள்வது மிகவும் சிறப்பானதாகும்.

வியாழக்கிழமை அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து பஞ்சமுக (ஐந்துமுக) விளக்கில் பஞ்ச வகையான எண்ணெய் ஊற்றிப், பஞ்சு திரி போட்டு ஐந்துமுகங்களையும் ஏற்ற வேண்டும். குரு பகவான் படத்தை வைத்து அதற்கு மஞ்சள் வண்ண மாலை அல்லது பூக்களை அணிவித்து, கொண்டக்கடலை, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் வைத்து, குரு கவசம் பாடி தீபாரதனையை பார்த்துக் கோரிக்கைகளை நினைத்து வழிபட வேண்டும். பிறகு நைவேத்தியத்தை, விரதம் மேற்கொண்டவர்கள் சிறிதளவு சாப்பிட்ட பிறகு மற்றவர்களுக்கு வழங்கினால்,  நினைத்த பலன் விரைவில் கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து கொள்ளலாம். முல்லைப்பூ  வாங்கிச் சூட்டலாம்.

பூஜை செய்யும் பொழுது-
'குருவே நீ பார்த்தால் போதும்
கோடியாய் நன்மை சேரும்!
திருவருள் இணைந்தால் வாழ்வில்
திருமணம் வந்து கூடும்!
பொருள்வளம் பெருகும் நாளும்
பொன்னான வாழ்வு சேரும்!
அருள்தர வேண்டி உன்னை
அன்போடு துதிக்கின்றோமே!'


என்ற குரு கவசத்தை மூன்று முறை பாடிவருவது நல்லது.
மேலும் குரு பகவான் யானையை வாகனமாகப் பெற்றிருப்பதால் குருவருளைப் பெற விரும்புபவர்கள் யானைக்கு கரும்பு, பழம் போன்றவற்றைக் கொடுத்து ஆசீர்வாதம் பெற்று அவரின் அருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

குரு வார விரதம் மேற்கொள்ளும் பொழுது அன்னதானம் செய்வது மகிவும் சிறந்ததாகும். அன்னதானத்தில் ஏதாவது ஒரு இனிப்புப் பொருள் அவசியம் இடம்பெற வேண்டும். பெரியவர்கள் ஆசி வழங்கும் பொழுது அரிசியில் மஞ்சள் சேர்த்து அட்சதையாக்கி வழங்குகிறார்கள். இதற்குக் காரணம் நமக்கு குருவருளும் இணைந்து கிடைப்பதற்காகத் தான் இதை வழங்குகிறார்கள்.

நவக்கிரகங்களில் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர் குரு பகவான்.

அந்தத்தென்முகக் கடவுளை இன்முகத்தோடு வழிபட்டால் நன்மைகள் தான் வந்து சேரும். நாட்டை ஆளும் யோகம் முதல் வீட்டில் நிம்மதியாக வசிக்கும் யோகம் வரை அனைத்தும் இவர் கையில்தான் இருக்கின்றது. குடும்பம் விருத்தி பெற, குலம் தழைக்க நாம் அனைவரும் குருவார விரதத்தை மேற்கொள்வோம். குதூகலமான வாழ்க்கையையும் பெறுவோம்.

Next Story