20. திருப்பாவை - திருவெம்பாவை


20. திருப்பாவை - திருவெம்பாவை
x
தினத்தந்தி 4 Jan 2017 7:01 AM GMT (Updated: 4 Jan 2017 7:01 AM GMT)

திருப்பாவை முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய் செப்பம் உடையாய்! திறல்உடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்! செப்பன்ன மெ

திருப்பாவை

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்
செப்பம் உடையாய்! திறல்உடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்!
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மைநீர் ஆட்டேலோர் எம்பாவாய்.


முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், துன்பம் ஏற்படும் முன்பே அவர்கள் நினைத்த நேரத்தில் அவர் களிடத்துச் சென்று காத்தவனே! பள்ளி எழுந்தருள வேண்டும். நேரிய செல்வோனே! பகைவருக்குத் துன்பம் தரும் விமலா! தூயவனே! துயில் எழுவாய். பொற்கலச மார்பினையும், செக்கச் சிவந்த வாயினையும், சின்னஞ்சிறு இடையினையும் கொண்ட நப்பின்னை நங்கையே! திருமகளுக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக! நாங்கள் நோன்பு நோற்பதற்கு தேவையான விசிறியும், கண்ணாடியும், உன் கணவன் கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள் மழையில் நீராட்டுவாயாக!

திருவெம்பாவை

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால்நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம்உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேல்ஓர் எம்பாவாய்.


இறைவா! அனைத்துக்கும் முதலாக உள்ள உன் திருப்பாதங்களை எங்களுக்கு தந்து அருள்புரிய வேண்டும். அனைத்துக்கும் முடிவாகவும் உள்ள உன் திருவடிகளை வணங்குகிறோம். எல்லா உயிர்களும் உண்டாக காரணமாக உள்ள உன் பொற் பாதங்களைப் போற்று கின்றோம். எல்லா உயிர்களுக்கும் இன்பம் தந்து காப்பாற்றும் உன் அழகிய திருவடிகளை போற்றுகின்றோம். திருமாலும், பிரம்மனும் காணமுடியாத உன் பாதமலர்களை போற்றுகின்றோம். நாங்கள் உய்யும்வண்ணம் எங்களை ஆட்கொண்டு அருளும் உன் தங்கக் கால்களை வணங்கி மார்கழி மாத நீரில் மூழ்கி நீராடுவோம்.


Next Story