பேச்சும் ஒரு மந்திரம் தான்


பேச்சும் ஒரு மந்திரம் தான்
x
தினத்தந்தி 23 March 2017 10:45 PM GMT (Updated: 23 March 2017 8:02 AM GMT)

நாவை எப்போதும் இனிமையாக வைத்திருங்கள். போகிற போக்கில் நாலு நல்ல வார்த்தைகளை கூறிச் செல்லுங்கள். கேட்பவரின் உள்ளம் உங்கள் பின்னாடியே ஓடி வரும்.

ரு திறமையான வியாபாரியின் தகைமை என்ன? என்பது குறித்து அறிஞர்கள் கூறுவதாவது: ‘பேச்சில் மயக்கும் மந்திரவாதியைப் போன்று அவர் இருக்க வேண்டும். முதலில் இனிமையான பேச்சு பின்னர் நியாயமான விலை இதுவே திறமையான வியாபார உக்தி’.

காரியதரிசி பதவிக்குத் தகுதியானவர் யார்..? இன்முகமும் இனிய பேச்சும் உடையவர்தான் வெற்றிகரமான காரியதரிசியாக வலம் வருவார்.

புரியாத புதிர் என்னவென்றால்.. சில கணவன்மார்கள்.. கஞ்சனாகவும், அழகற்றவராகவும் இருப்பார்கள். அதேவேளை மனைவியரின் அன்பைப் பெற்றவராக இருப்பார்கள். காரணம் என்ன? அவர்களுடைய இனிமையான பேச்சுதான். அந்த இனிய பேச்சில் மனைவியர்கள் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் மயங்கிக் கிடப்பார்கள்.

உள்ளங்களை கொள்ளை கொள்வதற்கு இஸ்லாம் கூறும் இனிய வழிகளில் ஒன்றுதான் இனிய பேச்சு. நாலு நல்ல வார்த்தைகளைக் கூறுவதால் ஒருவர் மகிழ்ச்சி அடைகிறார் என்றால் எதற்காக கடுகடுப்புடன் பேசவேண்டும்!? இனிய பேச்சின் மூலம் யாரை வேண்டுமென்றாலும் வழிக்குக் கொண்டுவரலாம்.

அண்ணலார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இருந்து இதனை அழகுற தெரிந்துகொள்ள முடியும். கைஸ் பின் ஆஸிம், அஸ்ஸுபர்கான் பின் பத்ர், அம்ர் பின் அல்அஹ்தம் இவர்கள் மூவரும் தமீம் கோத்திரத்தின் தலைவர்கள். ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் இம்மூவரும் வருகை தந்தனர். வந்தவர்கள் தங்களைக் குறித்து தாமே நபிகளாரிடம் சுய அறிமுகம் செய்யத் தொடங்கினர்.

அஸ்ஸுபர்கான் கூறினார்: ‘அல்லாஹ்வின் தூதரே! நான் தான் தமீம் கோத்திரத்தின் தலைவன். அவர்கள் எனக்கே கட்டுப்படுவார்கள். நான் அழைத்தால் பதில் தருவார்கள். அநீதி ஏற்படாமல் அவர்களை நான் பாதுகாக்கின்றேன். அவர்களுடைய உரிமைகளை மீட்டுக்கொடுக்கின்றேன்’.

பின்னர் அருகிலிருந்த அம்ர் பின் அல்அஹ்தம் அவர்களைச் சுட்டிக்காட்டி, ‘இவருக்கும் இது நன்றாகத் தெரியும்’ என்றார்.

உடனே அம்ர் அவர்கள், அஸ்ஸுபர்கானைக் கொஞ்சமாகப் புகழ்ந்தவாறு, ‘ஆம், அல்லாஹ்வின் தூதரே! கோத்திர மக்கள் இவர் சொன்னால் கட்டுப்படுவார்கள். மக்களுக்கு தீங்கு ஏற் படாமல் தடுக்கிறார்’ என்று கூறி இரண்டொரு வார்த்தைகளில் நிறுத்திக்கொண்டார். மேலதிகமாக புகழாமல் மவுனமாக இருந்தார்.

ஆனால் அஸ்ஸுபர்கானோ இன்னும் அதிகமாக தம்மை அவர் புகழ வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார். பொறாமையால்தான் தம்மை அவர் அதிகமாகப் புகழவில்லை என்று கருதினார்.

உடனே பெருமானார் (ஸல்) அவர்களிடம் கூறினார்: ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணை..! பொறாமையால்தான் என்னைக் குறித்து இவர் அதிகம் கூறவில்லை’.

இதுகேட்ட அம்ர் அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. அவரிடம் கூறினார்: ‘உம்மீது நான் பொறாமை கொண்டேனா..? அல்லாஹ்வின் மீது ஆணை! நீர் உமது சகோதரர்களால் சபிக்கப்பட்டவர். புதிய பணக்காரர். முட்டாள் பிள்ளைகளின் தந்தை. குடும்பமே கைவிட்ட தனி நபர் நீர்’.

தொடர்ந்து நபி (ஸல்) அவர்களைப் பார்த்து கூறினார்: ‘அல்லாஹ்வின் தூதரே! இவரைக் குறித்து நான் ஆரம்பத்தில் கூறியது உண்மை. இப்போது கூறியதிலும் பொய் எதுவும் கிடையாது. அவர் மீது நான் திருப்தியுடன் இருந்தபோது நல்லவற்றைக் கூறினேன். கோபமாக இருந்தபோது நான் பார்த்த தீயவற்றைக் கூறினேன். எனவே இரண்டு நிலையிலும் நான் உண்மையாகவே நடந்துள்ளேன்’.

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கோ ஆச்சரியம். எவ்வளவு வேகமாக வாதிடுகிறார்! எவ்வளவு அழகாகப் பேசுகிறார்! எவ்வளவு பலத்துடன் விளக்கமளிக்கிறார்! அவருடைய நாவின் திறமையைப் பார்த்து வியந்தவராக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக சில பேச்சுக்களில் மந்திர சக்தி இருக்கிறது’ (ஹாகிம்)

நாவை எப்போதும் இனிமையாக வைத்திருங்கள். போகிற போக்கில் நாலு நல்ல வார்த்தைகளை கூறிச் செல்லுங்கள். கேட்பவரின் உள்ளம் உங்கள் பின்னாடியே ஓடி வரும்.

அந்நியர் என்றால் நம்முடைய உரையாடல்களை அனேகமாக ஒற்றை வார்த்தையிலேயே முடித்துக்கொள்கிறோம். ‘உங்களிடம் ஒரு வி‌ஷயம் சொல்ல வேண்டும்’ என்று யாராவது நம்மிடம் சொன்னால்.. உடனே நாம், ‘ஹும்.. சொல்லு..’ என்று முடித்துக்கொள்கிறோம்.

‘கொஞ்சம் உதவி தேவை’ என்று எவராவது கேட்டால், அவர் கேட்டுமுடிப்பதற்குள்.. ‘என்னா..?’ என்றுவாறு ஒரு முறைப்பு. முறைக்கிற முறைப்பிலேயே என்ன கேட்க வந்தோம் என்பதையே அவர் மறந்துவிடுவார்.

‘ஆமா..’, ‘இல்லை..’, ‘சரி..’, ‘போ..’, ‘வா..’ என்பன போன்ற ஒற்றை வார்த்தைகளையே நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். இவை ஒருபோதும் அன்பை அறுவடை செய்யாது.

ஹுனைன் போர் முடிந்த காலகட்டம். அந்தப் போரில் கிடைத்த ஏராளமான ‘கனீமத்’ எனப்படும் போர்ப் பொருட்களை முஹாஜிர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கும், இஸ்லாத்தை தழுவலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டு வழங்கினார்கள். மதீனாவாசிகளான அன்சாரிகளுக்கு ஒரு காசுகூட தரவில்லை.

‘நபிகளார் தம் ஆட்களைப் பார்த்ததும் நம்மை மறந்துவிட்டார்கள்’ என்ற பேச்சு அன்சாரிகளுக்கு மத்தியில் எழுந்தது. அன்சாரிகளின் தலைவர்களில் ஒருவராகிய ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களுக்கும் இந்த எண்ணம் இருந்தது. நபிகளாருக்குத் திகைப்பு. உடனே அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் கூட்டிய பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களிடையே உரையாற்றினார்கள். அந்த உரை கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கக் கூடியதாக அமைந்து இருந்தது. அத்தனை அன்சாரிகளையும் அழ வைத்தது.

‘அன்சாரிகளே நான் கேள்விப்பட்டது உண்மையா..?’ என்று மூன்று தடவை கேட்டவாறு தமது உரையாடலை நபி (ஸல்) அவர்கள் தொடங்கினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! யாரோ பொறுப்பில்லாத சில அன்சாரி இளைஞர்கள் கூறியதை நீங்கள் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று அன்சாரிகள் பதில் கூறினர்.

ஆனால் நபியவர்கள் தொடர்ந்தார்கள். ‘அன்சாரிகளே! நான் வருவதற்கு முன் நீங்கள் தீய வழியில் இருந்தீர்கள். நான் வந்த பிறகு அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா..? நான் வருவதற்கு முன்னர் நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். நான் வந்தபிறகு அல்லாஹ் உங்களுக்கு செல்வத்தைத் தரவில்லையா..? நான் வருவதற்கு முன்னர் நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள். நான் வந்தபிறகு அல்லாஹ் உங்களிடையே ஒற்றுமையை மலரச் செய்யவில்லையா..?’

தம் வருகை மூலம் கிடைத்த மூன்று நன்மைகளை அண்ணலார் சொன்னபோது அன்சாரிகள் அனைவரும், ‘ஆம் அல்லாஹ்வின் தூதரே!’ என்று ஒப்புக்கொண்டார்கள்.

தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகள் மூலம் தமக்குக் கிடைத்த மூன்று நன்மைகளை இவ்வாறு குறிப்பிட்டார்கள்: ‘என் அருமைத் தோழர்களே! நீங்கள் வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம் – நீங்கள் மக்காவிலிருந்து பொய்யராக எங்களிடம் வந்தீர்கள். நாங்கள்தானே உங்களை உண்மையாளராக ஏற்றுக்கொண்டோம் என்று நீங்கள் சொல்லலாம். ஆம், அவ்வாறு நீங்கள் சொன்னால் அது உண்மைதான். மக்காவிலிருந்து உதவியற்றவராக நீங்கள் வந்தீர்கள். நாங்கள்தானே உதவியளித்தோம் என்று நீங்கள் சொல்லலாம். ஆம், அவ்வாறு நீங்கள் சொன்னால் அது உண்மைதான். மக்காவிலிருந்து விரட்டப்பட்டு அடைக்கலம் இல்லாமல் நீங்கள் மதீனா வந்தபோது நாங்கள்தானே அடைக்கலம் அளித்தோம் என்று நீங்கள் கூறலாம். ஆம், அவ்வாறு நீங்கள் சொன்னால் அது உண்மைதான்’.

பிறகு நபி (ஸல்) அவர்கள் சற்று சப்தம் உயர்த்திக் கேட்டார்கள்: ‘அழியக்கூடிய இந்த செல்வத்தின்மீதா நீங்கள் ஆசை வைக்கிறீர்கள்? அன்சாரிகளே! இந்தப் போரில் கலந்துகொண்டவர்கள் ஆடுகளையும் ஒட்டகங்களையும் தங்கள் பங்காக எடுத்துச் சென்று கொண்டிருக்க, அன்சாரி களாகிய நீங்கள் அல்லாஹ்வின் தூதரை உங்கள் பங்காக எடுத்துச் செல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’

இவ்வாறு கேட்டதுதான் தாமதம், அன்சாரிகள் அனைவரும் அழத் தொடங்கிவிட்டார்கள்.

தொடர்ந்து பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அன்சாரிகளே! உலக மக்கள் அனைவரும் ஒரு திசையில் சென்றுகொண்டிருக்க, அன்சாரிகளாகிய நீங்கள் வேறு திசையில் சென்றுகொண்டிருந்தால், அல்லாஹ்வின் தூதராகிய இந்த முஹம்மத் அன்சாரிகள் எந்தப் பாதையில் நடக்கிறார்களோ அந்தப் பாதையில் இருப்பேன்’.

இந்த வார்த்தைகளைக்கேட்டதும் ஒட்டுமொத்த அன்சாரிகளும் தலைகுனிந்து அழத் தொடங்கிவிட்டார்கள். நபிகளாரோ, ‘யா அல்லாஹ்! அன்சாரிகளின் பாவங்களை மன்னிப்பாயாக! அவர்களின் குழந்தைகளின் பாவங்களை மன்னிப்பாயாக! அந்தக் குழந்தைகளின் குழந்தைகளுடைய பாவங்களை மன்னிப்பாயாக!’ என்று மூன்று தலைமுறைகளுக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

அன்சாரிகள் அனைவரும் அழுதபடியே, ‘போரில் கிடைத்த எங்களின் பங்காக எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் மட்டுமே போதும்’ என்று ஒருமித்த குரலில் கூறினார்கள்.

பழக்கடையில் இனிப்பான கனிகளைத் தேர்ந்தெடுப்பது போன்று வார்த்தைகளிலும் இனிப்பானவற்றையே தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். இனிய பேச்சால் பிறர் மனதைக் கொள்ளை கொள்ளுங்கள்! ஏனெனில் வார்த்தைகளுக்கு மனதை மயக்கும் மந்திர சக்தி இருக்கிறது.

மவுலவி நூஹ் மஹ்ளரி, குளச்சல்.

Next Story