செவ்வாய் தோ‌ஷம் நீக்கும் பத்ரகிரி சிவசுப்பிரமணியர்


செவ்வாய் தோ‌ஷம் நீக்கும் பத்ரகிரி சிவசுப்பிரமணியர்
x
தினத்தந்தி 28 April 2017 12:45 AM GMT (Updated: 27 April 2017 12:23 PM GMT)

கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும், மலைநாடுகளில் முதன்மையானதாகவும், புனித பூமியாகவும் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பத்ராவதி தாலுகா திகழ்கிறது.

ர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும், மலைநாடுகளில் முதன்மையானதாகவும், புனித பூமியாகவும்  சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பத்ராவதி தாலுகா திகழ்கிறது. இந்த நகருக்கு ‘உருக்கு நகரம்’ என்ற புனைப்பெயரும் உண்டு. இந்த நகரம் ஆன்மிகத்திலும் சிறந்து விளங்குகிறது. இதேபோல் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகாவும் இயற்கை அன்னையின் செல்வச்செழிப்பு மிகுந்து, பக்தி மனம் கமழும் இடமாக காட்சி அளிக்கிறது.

சிவசுப்பிரமணியர் கோவில்

இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பத்ராவதி மற்றும் தரிகெரே பகுதிகளுக்கு இடையே எம்.சி.ஹள்ளி கிராமத்தில் பத்ரகிரி மலை அமைந்துள்ளது. அந்த மலையில் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற பெயரில் முருகன் ஆலயம் இருக்கிறது. இக்கோவிலில் வள்ளி–தெய்வானையுடன் சிவசுப்பிரமணியராக வீற்றிருந்து, முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பச்சை கம்பளம் விரித்தது போன்று பசுமை வயல்வெளியின் நடுவே பத்ரகிரி மலையில் சிவசுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் நுழைவு வாசலில் சென்றதும், மலை அடிவாரத்தில் முதலில் தென்படுவது அகத்தியர் மண்டபம் ஆகும். அங்கு அகத்தியர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

வனதுர்க்கை அம்மன்

அகத்தியர் மண்டபத்தை அடுத்து சக்தி தேவதையாகவும், பத்ரகிரியின் காவல் தெய்வமாகவும் வன துர்க்கை அம்மன் வீற்றிருக் கிறார். வன துர்க்கை அம்மன் அஷ்ட புஜங்களுடனும், அக்னி ஜுவாலையுடனும், பிறை சூடி சாந்த ரூபினியாகவும், புன்னகை பூத்துக்குலுங்கும் எழிலுடனும், கம்பீரத் தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார். துர்க்கை அம்மனின் திருக்கரங்களில் அங்குசம், கத்தி, கேடயம், வில், குவளை, அமிர்த கலசம் ஏந்திய நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அதையடுத்து மண்டப தூண்களில் அரியும், சிவனும் ஒன்றே என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும்படியாக சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. மத்தவாச்சாரியர் வசிஷ்ட மகாமுனிவர், விஸ்வாமித்திரர், ரேணுகாதேவி, பெரிய நாயகி, அர்த்தநாரீஸ்வரர், காயத்திரி தேவி, கங்காதேவி, அம்பிகாதேவி, நாகதேவி, துர்காதேவி ஆகிய சுவாமிகள் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து மூலவர் சன்னிதானத்துக்கு செல்லும் மலைப்பாதையில் ஏறும்போது பஞ்சமுக விநாயகர் நின்ற கோலத்தில் தனிக் கருவறையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும் விநாயகர் வீற்றிருக்கும் சன்னிதியில், சித்தி–புத்தி என்னும் பொருளுடன் கலையரசியான சரஸ்வதி தேவி வீணை ஏந்தி அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வடபுறத்தில் மகாலட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

ஆதி விநாயகர்

அங்கிருந்து சற்று மேலே ஏறினால் ஆதி விநாயகர் வீற்றிருக் கிறார். அதன்பிறகு மிகவும் பழமையான அரச மரம் இருக்கிறது. அதன் அடியில் நாகதேவதை உருவ சிலைகள் உள்ளன. இதன் அருகே பக்தர்களின் செவ்வாய்தோ‌ஷம், ராகுதோ‌ஷம், சந்தான தோ‌ஷம் போன்ற தோ‌ஷங்களுக்கு பரிகாரம் செய்ய பரிகார மண்டபங்கள் அமைந்துள்ளன. அதையடுத்து இரும்பாசூரனும், பரிகார தெய்வங்களும் உள்ளனர்.

அதை தாண்டிச் சென்றால் 110 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் வகையில் ராஜகோபுரத்தின் திருப்பணிகள் நடந்து வருவதை காணலாம். அங்கிருந்து மயில்தோகை விரித்தாற்போன்று இருவழிப்படி மண்டபம் அமைந்துள்ளது. அதன் அருகே கொடிமரமும் அமைந்திருக்கிறது. கொடிமரத்தின் முன்பு பக்தர்கள் மண்டியிட்டு முருகனை நினைத்து வேண்டினால் அவர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்று  நம்பப்படுகிறது.

வள்ளி–தெய்வானையுடன் காட்சி தரும் முருகன்

அதன்பிறகே மூலவரான முருகன் பிரமாண்ட தோற்றத்துடன் சிவசுப்பிரமணி சாமியாக காட்சி தருகிறார். அவரைச் சுற்றி மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. முருகனின் கருவறையில் இருந்து இருபுறமும் இந்த மண்டபங்கள் காட்சி அளிக்கின்றன.

கருவறையில் முருகன் வள்ளி–தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி உள்ளார். இதுமட்டுமல்லாமல் மகா மண்டபத்தில் பலி பீடம், மயில் வாகனம் அமைந்திருக்கிறது. இருபுறமும் துவார சக்தி காவல் தெய்வமாக இருக்கிறார்.

மனித உடலுடன் நந்தி பகவான்


கருவறையின் தென்புறத்தில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது. பலி பீடம், மகா நந்தி ஆகியவை சிவன் சன்னிதியின்  கருவறைக்கு நேர் எதிரில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக்கோவிலில் வித்தியாசமாக நந்தி பகவான், மனித உடல் அமைப்புடன் காட்சி தருகிறார். இது இக்கோவிலில் உள்ள சிறப்பம்சம் ஆகும்.

இக்கோவிலில் சிவன் லிங்க வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். லிங்கத்தின் பின்புறத்தில் சூரியனும், சந்திரனும் ஒருசேர அமைந்திருப்பதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

63 நாயன்மார்கள்


அதையடுத்து மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், சுந்தரர், அப்பர், சேக்கிழார், காரைக்கால் அம்மையார் திருமேனியும், 63 நாயன்மார்களும் அமைந்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் கோவிலில் முருகன் சன்னிதி வடபுறத்தில் 12 ராசிகள் உள்ளடங்கிய புரவி பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் உற்சவர் மணிமண்டபம் அமைந்துள்ளது.

இப்படி சிவசுப்பிரமணியசாமி கோவிலில் பல்வேறு தெய்வங்களும், பரிகார தெய்வங்களும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.

விழாக்காலம்

இக்கோவிலில் ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், கார்த்திகை மகா தீபம் ஆகியவை கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசம், பவுர்ணமி, விசாகம், பிரதோ‌ஷம் போன்றவையும் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் குறிப்பிடத்தக்கது கார்த்திகை தீப பெருவிழா. திருவண்ணாமலையில் மகா தீபத்தை கண்டு தரிசிப்பது சிறப்பாகும். அதுபோல், இந்தக்கோவிலில் கார்த்திகை தீபத்தன்று, கோவிலுக்கு வரும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்–சிறுமிகளின் பெயர்கள் துண்டு சீட்டுகளில் எழுதப்பட்டு முருகனின் பாதத்தில் வைக்கப்படும்.

அப்போது முருகனின் அருள் கிடைக்கும் குழந்தையை சக்தி தாயாக பாவித்து, புனித நீராட்டி, மலர் சூட்டி, மங்கள இசை முழங்க,  பக்தர்களின் அரோகரா, அரோகரா எனும் கோ‌ஷம் முழங்க, நெய் கலசம் ஏந்தி, குழந்தையின் கரங்களால் அகண்ட தீபத்தில் நெய்  வார்க்கப்பட்டு பின்னர் பக்தர் களுக்கு மகாஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது சிறப்பாகும்.

தோ‌ஷங்களும், பரிகாரங்களும்...

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செவ்வாய்தோ‌ஷம், பித்துரு தோ‌ஷம், ஜாதக பொருத்தமின்மை, திருமணத்தடை ஆகியவை நீங்கும் என்றும், குழந்தை பாக்கியம், செல்வம், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருதல் ஆகியவை கிட்டும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. அதற்கான பரிகார முறைகளும் உள்ளன. அதாவது செவ்வாய் தோ‌ஷம் நீங்க வேண்டி வரும் பக்தர்கள் திங்கட்கிழமை அன்று இரவே கோவிலுக்கு வந்து, குளத்தில் நீராடிவிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு முதல் பூஜையில் கலந்துகொண்டு முருகனை தரிசித்தால் செவ்வாய் தோ‌ஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

அதேபோல், செவ்வாய்க்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் திருமணத்தடை, ஜாதக பொருத்தமின்மை, புத்திர பாக்கியம் இல்லாதவர்கள்  கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்து பூஜை செய்தால் தடைகள் நீங்கி நினைத்தது நடக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

அமைவிடம்


இக்கோவில் பெங்களூரு–ஒன்னாவர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேவில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் பத்ரகிரி அமைந்துள்ளது.

Next Story
  • chat