தமிழ் மன்னனால் கட்டப்பட்ட பிரமாண்ட ஆலயம்


தமிழ் மன்னனால் கட்டப்பட்ட பிரமாண்ட ஆலயம்
x
தினத்தந்தி 30 May 2017 7:55 AM GMT (Updated: 30 May 2017 7:55 AM GMT)

உலகின் மிகவும் பிரமாண்டமான ஆலயம், கம்போடியா நாட்டில் உள்ளது. உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான்.

லகின் மிகவும் பிரமாண்டமான ஆலயம், கம்போடியா நாட்டில் உள்ளது. உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இந்த ஆலயம் ‘அங்கோர் வாட்’ என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட கோவில், கலை பொக்கிஷம் என்று போற்றப் படும் அங்கோர் வாட் ஆலயத்தை, தமிழ் மன்னர் ஒருவர் கட்டியிருப்பது தான் ஆச்சரியமான தகவல். ஆம்.. இந்த ஆலயத்தை இவ்வளவு அற்புதமாக கட்டி முடித்த பெருமை இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னனையேச் சாரும். போரில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்த இடத்தை, சூரியவர்மன் அழகானக் கோவிலாக மாற்றியிருக்கிறார்.

இந்தக் கோவிலானது சுமார் 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்றுச்சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால், அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டிடப் பணி நிறைவு பெறுவதற்கு, 27 ஆண்டு கள் ஆகியிருக்கிறது. இந்த ஆலயம் கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்து விட்டார்.

இரண்டாம் சூரியவர்மன் கட்டியபோது, அது ஒரு வைணவக் கோவிலாக இருந்ததாகவும், ஆறாம் ‘ஜெயவர்மன்’ ஆட்சிக்கு வந்த பிறகு, புத்தக் கோவிலாக மாற்றம் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இன்றுவரை இது புத்த ஆலயமாகவே விளங்கி வருகிறது. அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்தக் கோவில் அமைந்திருப்பதால், பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்ச்சுகீசிய துறவியால் மீண்டும் இந்த ஆலயம் வெளியுலகிற்கு தெரியவந்தது.

இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு, கம்போடிய தேசியக்கொடியில் ‘அங்கோர் வாட்’ கோவிலை பொறித்துள்ளது. எந்த ஒரு கேமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது என்பதே, இந்த ஆலயத்தின் பிரமாண்டத்தை பறைசாற்றும்.

இரண்டாம் ‘சூரியவர்மன்’ இந்த இடத்தை கைப்பற்றியவுடன், இந்த ஆலயத்தைக் கட்டியிருக்கிறார். இந்த இடம் தான் அவரது ஆட்சியில் தலை நகரமாக செயல்பட்டிருக்கிறது.

இந்தக் கோவிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம். திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இதுபோன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என சில பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில், 27 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

நடுவில் இருக்கும் 5 கோவில்களை, ஒரு அகழியும், மூன்று மண்டபங்களும் சூழ்ந்துள்ளன. மேற்கில் இருந்து வரும்போது அகழியின் மேல் அமைந்துள்ள நீண்ட பாலத்தின் வழியாக முதலாவது வெளி மண்ட பத்தை அடையலாம். முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம், தாமரை வடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர், நடனமாடும் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுவரின் வெளிப்புறத்தில் தூண்களோடு கூடிய பல கணிகள், தேவதைகள் மற்றும் விலங்குகளின் மீது அமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபங்களின் சுவர்களிலும் தேவதைகளின் உருவங்கள் காணப்படுகின்றன.

முதல் மண்டபத்தில் இருந்து நீண்ட வழி மூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச் சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து செல்லும்படி அமைந்துள்ளது. இரண்டாவது மண்டபத்தின் உட் சுவர்களில் வரிசையாக புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம், உயர்ந்த தளத்தின் மீது அமைந்திருப்பதுடன், மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோவில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம், கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மன்னனின் மனம் போல உயர்ந்து நிற்கும் இந்தத் திருக்கோவில், கடந்த 200 ஆண்டுகளாக வழி பாடின்றி இருக்கிறது. தற்பொழுது ஜப்பான், ஜெர்மன் காரர்கள் திருப்பணி செய்யத் தொடங்கியிருக்கிறார் கள். கர்ப்பக்கிரகத்தில் இருக்க வேண்டிய மூர்த்தங்கள் இப்போது காட்சியகத்தில் இருக்கின்றன.

Next Story