நற்செய்தி சிந்தனை : பிறர் குற்றம் காணாதே


நற்செய்தி சிந்தனை : பிறர் குற்றம் காணாதே
x
தினத்தந்தி 13 Jun 2017 10:09 AM GMT (Updated: 13 Jun 2017 10:09 AM GMT)

‘‘பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடாதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.

மத்தேயு என்ற நற்செய்தியாளர் எழுதியதை இந்த வாரம் நற்செய்தி சிந்தனையாகப் பகிர்ந்து கொள்வோம். 

இயேசு பிரான் தன் சீடர்களை நோக்கி இவ்வாறு கூறுகிறார்:

‘‘பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடாதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் எந்தத் தீர்ப்பைப் பிறருக்கு அளிப்பீர்களோ, அந்தத் தீர்ப்பைத்தான் நீங்களும் பெறுவீர்கள். அதுமட்டுமல்ல, நீங்கள் எந்த அளவைக் கொண்டு அளக் கிறீர்களோ, அந்த அளவையால்தான் உங்களுக்கும் அளக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’’.

‘‘நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரிகளின் கண்களில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பது எதனால்? அவர்களிடம் உங்கள் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா? என்று எப்படி உங்களால் கேட்க முடிகிறது?’’.

‘‘இதோ! நீங்கள் பாருங்கள். உங்கள் கண்ணில் மரக்கட்டை இருக் கிறதே? வெளி வேடக்காரர்களே! முதன் முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதற்குப் பிறகு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருந்து துரும்பை எடுங்கள். உங்களுக்கு அப்பொழுது தெளிவாய்க் கண் தெரியும்’’ என்கிறார்.

எல்லா நற்செய்திகளையும் போல, இந்த நற்செய்தியையும், ஆழ்ந்து கவனமாகச் சிந்திக்க வேண்டும். பிறரைக் குறை சொல்வதும், பிறரிடம் இருக்கும் குற்றங்களைப் பெரிது படுத்துவதும் மனிதர்களின் இயல்பாக இருக்கிறது. இவ்வுலகில் மனிதராகப் பிறந்தவர்கள், சக மனிதர்களின் குறைகளை மட்டுமே பார்த்து அவர்களை ஏளனமாகப் பார்க்கும் ஒரு மனநிலையை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட எண்ணங்கள் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டத்தான், மரக்கட்டை களையும், துரும்பையும் எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார். பிறரிடம் இருக்கும் சிறுகுற்றங்களைப் பெரிதுபடுத்தக் கூடாது என் கிறார். ஆகவேதான் உன் கண்ணில் மரக்கட்டை போல, அதிகமாகக் குற்றங்கள் இருக்கிறபொழுது, அடுத்தவர் கண்ணில் இருக்கும், துரும்பைப் பார்ப்பது என்ன காரணத்தால் என்று கேள்விக்கணை தொடுக்கிறார். எப்பொழுதுமே பிறரைக் குற்றவாளி என்று தீர்ப்பிடக்கூடாது என்கிறார்.

இயேசு பெருமானின் நற்செய்திப் போதனைகளை மீண்டும் மீண்டும் உற்று நோக்கினால், பிறர் குற்றம் காணாதே என்ற வாசகத்தைத்தான் அடிக்கடி வலியுறுத்துகிறார். அதோடு அவர் நின்று விடவில்லை. தொடர்ச்சியாகப் பல நற்செய்தி வாசகங்களை எடுத்துரைக்கிறார். பல இடங்களில் தீர்ப்பிடுவது பற்றிக் கூறுகிறார். யாரையும் யாரும் தீர்ப்பிடக் கூடாது; தீர்ப்பிட்டால், தனக்கும் அத்தகைய தீர்ப்பே கிடைக்கும் என்கிறார்.

அடுத்து வரும் நற்செய்தி, இன்னும் ஒருபடி மேலே செல்கிறது. ‘எந்த அளவைக் கொண்டு அளப்பீர்களோ’ என்ற வாசகத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனியுங்கள்.

பொதுவாக நீங்கள் வாரி வழங்கினால், உங்களுக்கும் அதுபோலவே வழங்கப்படும் என்பதைப் போல, இந்த அளவையைப் பற்றிப் பேசுகிறார்.

பிறரையும் அவர் தம் குறைகளையும் காண்பதற்கு முன்பு, உங்களிடம் இருக்கும் குறைகளை எண்ணிப் பாருங்கள். உங்களிடம் நிறைய குறைகளை வைத்துக் கொண்டு, அடுத்தவரிடம் குறை காணத் துடிப்பது எதற்காக? அதோடு மட்டுமா இருக்கிறீர்கள். உங்களிடம் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா? என்று ஒரு வினாவையும் தொடுக் கிறீர்கள்.

இவ்வாசகத்தின் உள்ளர்த்தம் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பார்த்துத் தெளிவடையுங்கள். முதலில் மனிதராகப் பிறந்த யாரும், தன் குற்றத்தையும், குறை களையும் என்றுமே ஒப்புக் கொள்வதில்லை. அப்படி ஒப்புக் கொள்வது இழிவானது என்று கருதுகிறார்கள். இப்படி இருக்கும்பொழுது, பிறரிடம் மட்டும் மன்னிப்பை எப்படி எதிர்பார்க்கிறார்கள்? சீர்திருத்தம் என்பது முதன் முதலில் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும். இயேசு பெருமானார் இவ்வுலகத்தில் எளிமையாக மட்டும் பிறந்தவரல்லர். எளிய வாழ்க்கையை வாழ்ந்தும் காட்டுகிறார். எளிய வாழ்வைப் பிறருக்கும் எடுத்துரைக்கிறார். எளிய வாழ்க்கையில் பொய் இல்லை. பொறாமை இல்லை. திருட்டு இல்லை. நேர்மை மட்டுமே கோலோச்சும்.

பிறரிடம் குறை காண்பவர்களை ‘வெளி வேடக்காரர்கள்’ என்கிறார். வேடக்காரர்கள் என்று மட்டும் சொல்லவில்லை. வெளி வேடக்காரர் என்று அழுத்தமாகக் கூறுகிறார். இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. வெறும் வேடக்காரர்கள் நாடகத்தில் மட்டும், ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்திற்கேற்ப நடித்துச் செல்வார்கள். ஆனால் ‘வெளி வேடக்காரர்கள்’ என்போர், வெளியே மட்டுமல்ல, உள்ளுக்குள்ளும் நிரந்தரமாக இத்தகைய வேடத்தையே தரித்து வலம் வருவார்கள். ஆகவே இப்படிப்பட்ட கடுமையான வார்த்தையைக் கூறுகிறார்.

‘நீங்கள் முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டை போன்ற அளவுடைய குறைகளைக் களைந்து விடுங்கள். பிறகு பிறரை நோக்கலாம். அந்தத் துரும்பை எடுக்கலாம்’ என்கிறார். 

இந்த நற்செய்தியைச் சிந்திப்பவன், பிறர் குற்றம் காணவும் மாட்டான். அவர்களை இழிவாக எண்ணவும் மாட்டான்.

மனிதப் பிறவி ஓர் உயர்ந்த பிறவி என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவன் உயர்ந்த நிலையையும், உன்னத நிலையையும் அடைய வேண்டுமானால், சில கட்டுப்பாடுகளைத் தனக்குத் தானே அமைத்துக் கொள்வதுதான் சிறந்தது.

கட்டுப்பாடு அற்ற வாழ்க்கை என்பது கடிவாளம் இல்லாத குதிரையைப் போன்றது. அது எப்பக்கமும் செல்லும்; இடறியும் விழும்.

இயேசு பெருமான் இந்த உலகில் அவதரித்த நோக்கமே, மனிதர்களைப் பாவ வழிகளில் இருந்து விடுபெறச் செய்து, வீடு பேறு அடைய வைப்பதேயாகும். அந்த நல்ல நோக்கம் நிறைவேற வேண்டுமானால், மனித வர்க்கம் இணைந்து இயல்பாகவும், எளிமையாகவும் வாழ வேண்டும். 

தான் மட்டுமே சரியானவனைப் போலவும், ஏனையோர் குற்றமுள்ளவர்களைப் போலவும் எண்ணும் நிலையே இன்றைக்கு மனிதர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டுமானால், பிறர் குற்றம் காணாமல், தன் குற்றம் பார்த்து, தங்களைத் தாங்களே சீர்திருத்திக் கொண்டு, வாழ்ந்து, பிறர் வாழ்த்த நற்கதி அடைய வேண்டும்.

இயேசு பெருமானின் இந்நற்செய்தி சிந்தனையை ஏற்போம். அவர்தம் வழியைப் பின்பற்றுவோம். அவ்வழியில் நலம் பெறுவோம்.

Next Story