நற்செய்தி சிந்தனை: குருவும், சீடர்களும்


நற்செய்தி சிந்தனை: குருவும், சீடர்களும்
x
தினத்தந்தி 25 July 2017 9:46 AM GMT (Updated: 25 July 2017 9:46 AM GMT)

“சீடர்கள், குருவை விடப் பெரியவர்கள் கிடையாது. பணி செய்பவர்களும், தம்முடைய தலைவரை விடப் பெரியவர்கள் கிடையாது.

த்தேயு என்ற நற்செய்தியாளர் அக்காலத்தில் அறிவித்த செய்தியை, இவ்வாரம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்ப்போம்.

அக்காலத்தில், இவ்வுலகில் மனிதராகப் பிறந்த இயேசு பிரான், தம்முடைய சீடர்களை நோக்கி இவ்வாறு கூறுகிறார்:

“சீடர்கள், குருவை விடப் பெரியவர்கள் கிடையாது. பணி செய்பவர்களும், தம்முடைய தலைவரை விடப் பெரியவர்கள் கிடையாது. சீடர்கள், தம் குருவைப் போல ஆகட்டும். பணியாளர்கள், தம்முடைய தலைவரைப் போல ஆகட்டும். அதுவே போதுமானது என்பதை நாம் அறிதல் வேண்டும்”.

“வெளியே தெரியாதபடி, மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை. அறிந்து கொள்ள இயலாதவாறு, மறைவாக இருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் கூறுவதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். 
செவியோடு செவியாய்க் கேட்பதை, வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று அறிவியுங்கள். ஆன்மாவைக் கொல்வதற்கு இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்குப் பயப்பட வேண்டாம். ஆன்மாவையும், உடலையும் நரகத்தில் அழிப்பதற்கு வல்லவருக்கே பயப்படுங்கள்”.

“காசுக்கு, இரண்டு சிட்டுக்குருவிகள் விற்பது இல்லையா? எனினும், அவற்றுள் ஒன்றுகூட, உங்கள் தந்தையின் விருப்பமின்றி, தரையில் விழுந்து விடாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டு இருக்கிறது. சிட்டுக் குருவிகள் பலவற்றையும் விட, நீங்கள் மேலானவர்களாக இருக்கிறீர்கள். எனவே பயப்படாதிருங்கள்”.

“மக்களின் முன்பாக, என்னை, ஏற்றுக்கொள்பவரை, விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்பாக, நானும் ஏற்றுக்கொள்வேன். மக்களின் முன்பு என்னை மறுப்பவர் எவரையும், விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்பாக, நானும் மறுதலித்து விடுவேன்”
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நற்செய்தியை உற்றுக்கவனியுங்கள். இயல்பாகவும், இயற்கையாகவும் இயேசு பிரான் கருத்தொன்றைத் தொடங்கிப் பேசுவதைக் கவனித்துப் பாருங்கள். ‘சீடர்கள், குருவை விட பெரியவர் கிடையாது’ என்று தொடங்குகிறார்.

உண்மைதான், சீடர் என்பவர் யார்?

‘குருவிடம் இருந்து பயிற்சி பெறுபவர்கள், குருவின் வார்த்தைக்குச் செவி கொடுப்பவர்கள்’.

ஆகவே இத்தகைய சீடர்கள், குருவை விடப் பெரியவர்களாக எப்படி இருக்க முடியும்?

அதனால்தான் இயேசு பிரான், இப்படிப்பட்ட வார்த்தையால் தன் போதனையைத் தொடங்கு கிறார். இக்காலத்தில் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நம்மால் உணர முடியும்.

அடுத்து அவரிடம் இருந்து வரும் வார்த்தை களைக் கவனியுங்கள். மேலும் முதல் வார்த்தைக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. ‘பணியாளர்களும், தம்முடைய தலைவர்களை விடப் பெரியவர்கள் கிடையாது’ என்று கூறுகிறார்.

சீடர்களுக்குப் போதிக்கும்போது இப்படியாக ஒரு வார்த்தையைக் கூறுகிறார். ‘ஆகவே நீங்கள் பயப்பட வேண்டாம்’ என்று சொல்லி விட்டு, அருமையான ஒரு கருத்தை வெளிப்படுத்துகிறார்.

‘வெளியே தெரியாதபடி மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை. அறிந்து கொள்ள இயலாதவாறு, மறைவாக இருப்பதும் ஒன்றும் இல்லை’.

இவ்வாசகத்தை மேலும் தங்கள் சிந்தனையால் மெருகேற்றிப் பாருங்கள். எல்லாம், அறிந்து கொள்ளக்கூடியதுதான். எதையும் மறைத்து விட முடியாது என்ற கருத்து புலப்படுகிறது.

எதையும் மறைத்து விட முடியாது என்பதால், கேட்பதைப் பகிரங்கமாக அறிவியுங்கள்.

அதற்கு அவர் இப்படிக் கூறு கிறார்: ‘காதோடு, காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று, வெளிப்படையாய் அறிவியுங்கள்’ என்கிறார்.

ஆன்மா வேறு; உடல் வேறு என்பதை நாம் அறிவோம். அக்காலத்தில் இப்படிப்பட்டவைகளை எண்ணிப் பார்ப்பவர்கள் கிடையாது. வெறும் உடலை மட்டும் அழித்து விட்டால், வெற்றி என்று எண்ணும் காலம் அந்தக் காலம். இக்காலத்திலும் அப்படிப்பட்ட கருத்துதான் நிலவுகிறது.

கண்ணுக்குப் புலப்படும் உடலை மட்டும் கொல்வதால், உடல் இயக்கம் இருக்காது. ஆன்மா அப்படிப்பட்டதல்ல. உடலை விட்டு வெளியே சென்று இயங்குகிறது. அந்த ஆன்மாவைப் புனிதமாக்கி வைப்பதுதான், ஒருவனுக்கு வெற்றி வாழ்க்கையாகிறது.

‘இத்தன்மை வாய்ந்த ஆன்மாவையும், உடலையும், நரகத்தில் அழிப்பதற்குத் தயாராக இருக்கும், வல்லமையுடையவர்களுக்குப் பயப்படுங்கள்’ என்கிறார்.

‘காசுக்கு இரண்டு சிட்டுக்குருவி விற்கிறார்கள். அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமில்லாமல், தரையில் விழுந்து விடாது’ என்கிறார்.

ஆம்! சிட்டுக்குருவி மிகச் சிறியது. அவ்வளவு சிறியதான அக்குருவிகூட பரலோகத் தந்தையின் விருப்பமில்லாமல், தரையில் விழுந்து விடாது.
தொடர்ந்து அவர் கூறும்பொழுது, ‘உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டு இருக்கிறது. சிட்டுக்குருவிகள் எல்லாவற்றையும் விட, நீங்கள் மேலானவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே பயப்படாமல் இருங்கள்’ என்று துணிச்சலையும், நம்பிக்கையையும் ஊட்டுகிறார்.

எல்லாவற்றையும் கூறி விட்டு, இறுதியாக அவர் கூறும் வார்த்தைதான், ஆணித்தரமானது.

‘மக்களின் முன்பாக என்னை ஏற்றுக் கொண்டால், விண்ணகத்தில் இருக்கும் என் தந்தையின் முன், நானும் ஏற்றுக்கொள்வேன். மக்களின் முன் என்னை மறுத்தால், யாராக இருந்தாலும், என் தந்தையின் முன்பாக நானும் மறுதலித்து விடுவேன்’ என்று கூறுகிறார்.

இயேசு பிரான் இம்மண்ணுலகில் அவதரித்த நோக்கமே, மக்களை நல்வழிப்படுத்தி, தந்தையிடம் சேர்ப்பதற்கே என்பதை நாம் அறிவோம். அதனால்தான் அவர் இவ்விதம் கூறுகிறார்.

இந்த நற்செய்தியைச் செவிமடுக்கும் நாம், இயேசு பிரானின் கருத்துகளைக் கேட்போம். நல்வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம். அதோடு மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் சிந்திப்போம்.

‘உங்கள் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டு இருக்கிறது’ என்று இவ்விடத்தில் குறிப்பிடும் இயேசு பிரான், வேறோர் இடத்தில், ‘நீங்கள் நினைத்தால்கூட ஒரு முழம் கூட்டவோ குறைக்கவோ உங்களால் முடியாது’ என்ற கருத்தையும் எடுத்துரைக்கிறார்.

இம்மண்ணுலகில் மிகக்குறைந்த காலமே இயேசு பிரான் வாழ்ந்தார் என்ற கருத்து வரலாற்று ரீதியாக இருக்கிறது என்றாலும், அவருடைய போதனைகள், இவ்வுலகம் உள்ளவரை மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், இறுதியில் நற்கதி அடைவதற்கும் உள்ள வழியாகவும் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Next Story
  • chat