தும்பிக்கையானை நம்பிக்கையோடு வழிபடுவோம்!


தும்பிக்கையானை நம்பிக்கையோடு வழிபடுவோம்!
x
தினத்தந்தி 14 Aug 2017 5:30 PM IST (Updated: 14 Aug 2017 3:21 PM IST)
t-max-icont-min-icon

விக்னங்களைத் தீர்ப்பதால் ‘விக்னேஸ்வரர்’ என்றும், கணங்களுக்கு அதிபதியாக விளங்குவதால் ‘கணபதி’ என்றும், தும்பிக்கை உள்ளதால் தும்பிக்கையான் என்றும், ஐந்து கரங்களைப் பெற்றதால் ஐங்கரன் என்றும், ஆனைமுகம் உள்ளதால் ஆனைமுகன் என்றும் போற்றப்படும் பிள்ளையாரைத் தொழுதால் எல்லையில்லாத நற்பலன் கிடைக்கும்.

அற்புதப் பலன்தரும் பிள்ளையாருக்கு உகந்தது சதுர்த்தி திதி. அதிலும் ஆவணி மாதம் வரும் சதுர்த்தி திதி ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நன்னாள் 25-8-2017 (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் மோதகம், அப்பம், அவல், பொரி, கடலை வைத்து மூஷிக வாகனத்தானை வழிபடுவது வழக்கம். மேலும் விரதமிருந்து கவசம் பாடி பிள்ளையாரைத் துதித்தால் நல்ல பலன்கள் இல்லத்தில் நடைபெறும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும். ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு, கணபதியை வேண்டினால், பெருகும் பொன்னை அள்ளி அவர் பெருமையுடன் நமக்களிப்பார்.

எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துகளுக்கு நற்பலன் கிடைக்கும். எனவேதான் அவரை ‘மூலகணபதி’ என்றும் நாம் வர்ணிக்கின்றோம்.

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும் 3 விதமான கணங்களாகப் பிரித்து, திருமண சமயத்தில் கணப்பொருத்தம் பார்ப்பர். அவை தேவ கணம், மனித கணம், ராட்சச கணம்.

நாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி.

அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கு, எப் பொழுது கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் அருள்தருபவர் பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். மாட்டு சாணத்திலும் காட்சி தருவார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்குச் சென்றும் வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.

‘சதுரம்’ என்றால் நான்கு பக்கங்கள் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக நாம் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்வது நல்லது. அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலைகள், அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. பிடித்த மலர்கள், தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ. இவற்றில் ஏதாவது ஒன்றை விநாயகருக்கு சூட்டி வழிபடலாம்.

விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொள்வது ஐதீகம். ‘தோர்பிக்கர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் கைகளில் என்று பொருள். கர்ணம் என்றால் காது என்று பொருள். கைகளினால் காதைப்பிடித்துக் கொள்ளுதல் என்பது இதற்கு பொருளாகும். இவ்வாறு செய்வதால், ரத்த ஓட்டம் சீராகி மூளைக்கு தடையின்றி செல்கிறது; இதனால் நினைவாற்றல் கூடும்.

கஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு முன்பு, தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை அழித்து, தேவர்களை காப்பாற்றினார் விநாயகர். எனவே விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் தோப்புக்கரணத்தைப் போட்டனர். அந்தப் பழக்கமே நடைமுறைக்கு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். அவருக்கு படைக்கும் பொருட்களில் கூட அர்த்தம் இருக்கிறது. மோதும் அகங்கள் இருக்கக் கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தித்தான் மோதகத்தைப் படைக்கின்றோம்.

துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்கின்றோம். விளாம்பழத்தில் கடினமான ஓட்டிற்குள் இனிய கனி இருக்கும். கடினமான உழைப்பிற்குப் பின்னர் கனிவான வாழ்க்கை இருக்கின்றது என்பதை அது எடுத்துக் காட்டுகின்றது. “அவல்” குசேலனைக் குபேரனாக்கிய பொருளாகும். எனவே இவற்றையெல்லாம் ஆனைமுகனுக்கு கொடுத்து கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை, மக்கள் போற்றும் செல்வாக்கு வந்து சேரும்.

ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள்கொடுப்பவர் ஆனைமுகன். சனி, விநாயகரைப் பிடிக்க வந்த பொழுது, ‘இன்றுபோய் நாளை வா’ என்று எழுதி வைக்கச் சொல்லித் தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகன். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரதமிருந்து, அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும். காரிய வெற்றி ஏற்படும். புத்திக்கூர்மை உண்டாகும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். விநாயகருக்கு எள்ளுருண்டை நிவேதனம் செய்து வழிபட்டால், சனிபகவானின் பாதிப்பில்இருந்து விடுபடலாம்.

எனவே அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்று ஆனைமுகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். அகிலம் போற்றும் வாழ்க்கை அமையும். விநாயகரை சதுர்த்தியில் வணங்கி, சந்தோஷம் காணுங்கள்.

மகிழ்ச்சி தரும் மாங்கனி விநாயகர்

ஞானப்பழத்தைக் கேட்டு பிள்ளையாருக்கும், முருகனுக்கும் போட்டி நடைபெற்ற பொழுது, ‘இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் பழம்’ என்று உமையவளும், சிவனும் கூறினார்கள். அந்த முடிவைக் கேட்டு முருகப்பெருமான் மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். அவர் வருவதற்குள், பெற்றோரை வலம் வந்து, ‘தாய்-தந்தையரை வலம் வந்தால் உலகத்தைச் சுற்றியதற்குச் சமம்’ என்று சொல்லி பழத்தைப் பெற்றுக் கொண்டார் விநாயகர்.

 அங்ஙனம் மாம்பழ விநாயகராக காட்சியளிக்கும் கோலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் இருக்கிறது. இந்த மாம்பழ விநாயகரை வழிபட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும்.

Next Story