ஜென் கதை - காலம் கடந்து நிற்கும் ‘நன்றி’


ஜென் கதை - காலம் கடந்து நிற்கும் ‘நன்றி’
x
தினத்தந்தி 22 Aug 2017 6:14 AM GMT (Updated: 22 Aug 2017 6:14 AM GMT)

அந்த குருகுலத்தில் இருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையோடும், அன்போடும் பழகி வந்தனர். அவர்களில் இருவர் இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர்.

ந்த குருகுலத்தில் இருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையோடும், அன்போடும் பழகி வந்தனர். அவர்களில் இருவர் இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர். ஒருவருக்கு துன்பம் வந்தால் மற்றவர் அந்தத் துன்பம் தனக்கே வந்ததாக எண்ணி வருந்துவர். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களில் சமமாகப் பங்கெடுத்துக்கொள்வார்கள்.

ஒரு நாள் குருகுலக் கல்வி முடிவுக்கு வந்தது. குருவின் போதனைகளை நல்ல முறையில் கற்றறிந்த மாணவர்கள் அனைவரும், வாழ்வின் தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு ஊருக்குப் பயணிக்கத் தொடங்கினர்.

இணைபிரியாத நண்பர்களும் கூட இணைந்தே தங்கள் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள் பாலைவனப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சுடும் மணலில் நடக்கும் வேதனை தெரியாமல் இருப்பதற்காக, இருவரும் சிரித்து பேசிய படியே நடந்து சென்றார்கள். அந்த பேச்சின்போது, அவர்களின் வாதம் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றிச் சென்றது. அந்த வாதம், வாக்குவாதமாக மாறி ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றிவிட்டது.

கருத்து வேறுபாடு அவர்களுக்குள் வாய்ச் சண்டையாக மாறியதில், ஒருவன் மற்றவனின் கன்னத்தில் அறைந்துவிட்டான். கடுமையான வெயிலில் நடந்த சோர்வு ஒரு பக்கம் வாட்ட, கூடவே தன்னுடைய அருமை நண்பன் தன் கன்னத்தில் அறைந்த வேதனையும் சேர்ந்துகொண்டது. அறை வாங்கியவன் ஒன்றும் பேசாமல் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டான். மணலில் தன் விரலால், ‘இன்று என் உயிர் நண்பன் என்னுடைய கன்னத்தில் அறைந்துவிட்டான்’ என்று எழுதினான்.

அவன் என்ன எழுதினான் என்று மற்றவனுக்குப் புரியவில்லை. இருவரும் எதுவும் பேசாமலேயே மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் தாகம் வாட்டியது.

பாலைவனம் என்பதால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் என்பதே இல்லை. ஆனால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. வழியில் ஒரு ஊற்றைக் கண்டார்கள். நடந்த பிரச்சினைகளையெல்லாம் மறந்து, அந்த ஊற்றில் இருந்த நீரை தாகம் தீர அள்ளி அள்ளி குடித்தனர். அப்போது கன்னத்தில் அறை வாங்கியவனின் காலை யாரோ பிடித்து இழுப்பது போல் இருந்தது. அவன் யாரென்று சுதாரிப்பதற்குள் அங்கிருந்த புதைகுழிக்குள் சென்றிருந்தான் அவன்.

புதைகுழியில் சிக்கிக்கொண்ட நண்பனை மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் கன்னத்தில் அறைந்த நண்பன்.

ஆபத்தில் இருந்து மீண்ட நண்பன், சற்று தொலைவு சென்று அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தான். ஒரு கல்லை எடுத்து தட்டி தட்டி எதையோ எழுத ஆரம்பித்தான்.

அவன் எழுதியது இதுதான்... ‘இன்று என் உயிர் நண்பன் என்னுடைய உயிரைக் காப்பாற்றினான்’.

இதையெல்லாம் பார்த்த நண்பன் கேட்டான், ‘நான் உன்னை அறைந்தபோது மணலில் எழுதினாய்; இப்போது உன்னைக் காப்பாற்றியதை கல்லில் எழுதுகிறாய். ஏன் இப்படி கல்லில் சிரமப்பட்டு எழுதவேண்டும்? இதற்கு என்ன அர்த்தம்?’ என்றான்.

அறை வாங்கிய நண்பன், ‘ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது. அந்த விஷயம் மறக்கப்படக்கூடிய ஒன்று. அதனால் அதை மணலில் எழுதினேன். காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று, அந்த எழுத்துகளை அழித்துவிடும். ஆனால், நன்றி என்பது மறக்கப்படக் கூடாதது. அதை அழிக்க முடியாத கல்வெட்டைப் போல கல்லில்தான் எழுதி வைக்க வேண்டும். அப்போதுதான் அது காலத்தைக் கடந்து நிற்கும்’ என்றான்.

Next Story
  • chat