நற்செய்தி சிந்தனை - கணவன்-மனைவி உறவு


நற்செய்தி சிந்தனை - கணவன்-மனைவி உறவு
x
தினத்தந்தி 5 Sep 2017 7:28 AM GMT (Updated: 5 Sep 2017 7:28 AM GMT)

பரிசேயர், இயேசு பெருமானை நெருங்கி, பெருமகனாரைச் சோதிக்கும் எண்ணத்துடன், ‘ஒருவர் தன்னுடைய மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு, விலக்கி விடுவது முறையா?’ என்று கேட்டனர்.

ற்செய்தியாளர் மத்தேயுவின் நற்செய்தியைச் செவிமடுப்போம்.

பரிசேயர், இயேசு பெருமானை நெருங்கி, பெருமகனாரைச் சோதிக்கும் எண்ணத்துடன், ‘ஒருவர் தன்னுடைய மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு, விலக்கி விடுவது முறையா?’ என்று கேட்டனர். அதற்கு மறு மொழியாக, ‘படைக்கும் பொழுதே கடவுள், ஆணும் பெண்ணுமாகப் படைத்தார் என்று, நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?’ என்று கேட்டார். மேலும் அவர், ‘ஆகவே கணவன், தன் தாய், தந்தையை விட்டு விட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்து இருப்பான். இருவரும் ஒரே உடலாக இருப்பார்கள். இனிமேல் அவர்கள் இருவரும் இருவர் அல்லர். ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காது இருக்கட்டும்’ என்றார்.

அவர்கள், இயேசு பெருமானைப் பார்த்து, ‘அப்படியானால், மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து, மனைவியை விலக்கி விடலாம் என்று, ‘மோசே’ கட்டளையிட்டது ஏன்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் மறுமொழியாக, ‘உங்களின் கடின உள்ளத்தின் பொருட்டே, உங்கள் மனைவியரை விலக்கி விடலாம்’ என்று, ‘மோசே’ உங்களுக்கு அனுமதி அளித்தார்.

‘ஆனால் தொடக்க காலம் முதல் அவ்வாறு இல்லை. பரத்தமையில் ஈடுபட்டதற்காக அன்றி, வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டு, தன் மனைவியை விலக்கி விட்டு, வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று கூறினார்.

அவருடைய சீடர்கள், அவரை நோக்கி, ‘கணவன், மனைவியர் உறவானது இத்தகையது என்றால், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே நல்லது’ என்றார்கள். அதற்கு அவர், ‘அருட்கொடை பெற்றவர் அன்றி, வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர், பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவர்களாய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சில பேர், மனிதரால் அந்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மேலும் சிலர், விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தங்களையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக்கூடியவர் ஏற்றுக் கொள்ளட்டும்’ என்றார்.

இந்த நற்செய்தியை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். கவனித்தால் மட்டும் போதாது. எக்கருத்து சொல்லப்படுகிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இயேசு பெருமகனாரின் போதனை முக்காலத்தையும் தன்னகத்தே கொண்டு மிளிர்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

முக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இக்கருத்தை ஆராய்வோம்.

பரிசேயர்கள், இயேசு பெருமானைச் சோதிக்கத் திட்டமிட்டே இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். ‘ஒருவர் தன்னுடைய மனைவியை, எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?’ என்று தொடங்குகிறார்கள். அவர்களுக்கு வேண்டுமென்றால், பதில் சொல்ல முடியாமல் இருக்கலாம். எல்லாம் அறிந்த இயேசுவுக்கு விடை சொல்லத்தெரியாதா?

காரணம் கண்டுபிடிக்க முயலும் அவர்களுக்கு, நேரான பதிலை உடனே சொல்லாமல், இவரே ஒரு கேள்வியைத் தொடுக்கிறார்.

‘இவ்வுலகில், கடவுள் படைக்கும்பொழுதே, ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்’ என்று மறைநூலில் வாசித்ததில்லையா?’ என்ற எதிர் கேள்வியை போடுகிறார். இதைச் சொல்லி விட்டு, அதோடு விட்டு விடாமல், மேலும் தொடர்கிறார் என்பதையும் எண்ணிப் பார்ப்போம்.

ஆணும் பெண்ணுமாகப் படைத்தது எதற்காக? என்பதற்குத்தான் அடுத்து வரும் செய்தி விளக்கமாகிறது.

ஆகவே கணவனானவன், தன் தாய், தந்தையரை விட்டு விட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்து இருப்பான். இருவரும் ஒரே உடல்; அவர்கள் இனிமேல் இருவர் என்று எண்ணக்கூடாது.

இக்கருத்தை மேலோட்டமாகப் பார்த்தால், ‘மணமானவன், தன்னுடைய தாய் தந்தையரைப் புறந்தள்ளி விட்டு’ என்ற கருத்து புலப்படுவதுபோலத் தோன்றலாம். அப்படியல்ல, சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகப் பிரிந்துபோய் வாழ வேண்டும் என்பது பொருளல்ல.

ஒருவன் தன் தாயை நேசிக்கிறான் என்பதற்காக, பிற தாய்மார்களை வெறுக்கிறான் என்பது பொருள் அல்ல.

உடலால் சேர்ந்து வாழ வேண்டும். அவ்வாழ்வில் ‘அன்பு’ பலப்பட வேண்டும். யாரும் பிரித்து விடக்கூடாது. மனிதனுக்கு அந்த அதிகாரம் இல்லை. ஆகவே, ‘கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காது இருக்கட்டும்’ என்று கூறு கிறார்.

இதற்கு மேலும் பரிசேயர் கூட்டம், அவரை விடுவதாக இல்லை. சோதிக்க வந்தவர்கள் விடுவார்களா? எப்படியாவது அவரை மடக்கி விட வேண்டும் என்றல்லவா, துடியாய்த் துடிப்பார்கள்.

வேறு ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள். இக்கேள்வி அக்காலத்தில் ‘மோசே’யின் கட்டளைக்கு உட்பட்டதாக இருக்கிறது.

‘அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து விட்டு மனைவியை விலக்கி விடலாம்’ என்ற மோசேயின் கட்டளையை எடுத்துக் காட்டுகிறார்கள்.

இயேசு பெருமான் தக்க பதிலை அவர்களின் உளப்பாங்கை வைத்தே கூறுகிறார்.

‘உங்களின் கடின உள்ளத்தின் பொருட்டே’ இப்படியொரு கட்டளை, மோசேயிடம் இருந்து வருகிறது.

அப்படியென்றால் என்ன?

‘எப்படியும் மணவிலக்குப் பெற வேண்டும் என்ற கடின உள்ளம் இருப்பதால், இப்படிச் சொல்லியிருக்கிறார்’, என்கிறார்.

இயேசு பெருமான் சொல்கிறபொழுது, இப்படி ஒரு கருத்தை வெளிப்படுத்து கிறார். எப்படி?

தொடக்க காலம் முதல் அப்படி இல்லை. ‘பரத்தமையில் ஈடுபட்டால் மட்டும்’ என்று சொல்லி விட்டு, விளக்கம் அளிக்கிறார்.

அக்காலத்தில் ‘பரத்தமை’ (விபசாரம்) என்பது சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறது. வேறு காரணங்களுக்காக விலக்கி வைப்பவனும், விபசாரம் செய்கிறார் என்கிறார்.

அவர்களும் அவரை விட்டபாடில்லை. கணவன்-மனைவி உறவானது இத்தகையது என்றால், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது என்று வாதிடுகிறார்கள்.

அதற்கு அவர் சொல்லும் பதில் அர்த்தம் உள்ளது, வாழ்க்கைக்கு ஏற்றது.

ஆகவே புதிய கருத்தைக் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறார்:

‘அருள் கொடை பெற்றவர்களைத் தவிர வேறு எவரும் இக்கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று சொல்லி விட்டு, ‘பிறவியிலேயே மண உறவு கொள்ள இயலாதவர்களையும், மனிதரால் அந்நிலைக்குத் தள்ளப்படுபவர்களையும், மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுபவர்களையும், தங்களைத் தாங்களே விண்ணரசின் பொருட்டு ஆக்கிக் கொள்பவர்களையும் பிரித்துக் காட்டி, ஏற்றுக் கொள்பவர் ஏற்கட்டும்’ என்ற புதிய கருத்தை விதைக்கிறார். நாமும் சிந்திப்போமாக!

(நற்செய்தி தொடரும்)

Next Story