பாவங்கள் மன்னிக்கப்பட்டன


பாவங்கள் மன்னிக்கப்பட்டன
x
தினத்தந்தி 31 Oct 2017 7:38 AM GMT (Updated: 31 Oct 2017 7:37 AM GMT)

‘இவள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில், மிகுதியாக இவளே அன்பு கூர்ந்தாள். குறைவாக மன்னிப்புப் பெறுவோர், குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்’ என்கிறார்.

புனித லூக்கா என்ற நற்செய்தியாளரின், நற்செய்தியை எண்ணிப் பார்ப்போம்.

அக்காலத்தில், பரிசேயருள் ஒருவர், இயேசு பெருமானை தம்மோடு உணவு உண்பதற்கு வீட்டிற்கு அழைத்திருந்தார். அவரும், பரிசேயருடைய இல்லத்திற்குச் சென்று பந்தியில் அமர்ந்தார். அந்நகரத்தில், பாவியான பெண் ஒருத்தி இருந்தாள். இயேசுவானவர், பரிசேயர் ஒருவருடைய வீட்டில் உணவு உண்ணச் செல்கிறார் என்று அவளுக்குத் தெரிய வந்தது.

உடனே நறுமணம் கொண்ட தைலத்தின் சிமிழோடு அங்குச் சென்றாள். இயேசு பெருமானுக்குப் பின்னால், கால் மாட்டிற்குச் சென்று அழுது கொண்டே நின்றாள். அவருடைய காலடிகளைத் தம்முடைய கண்ணீரால் நனைத்தாள். தம் கூந்தலால், காலைத் துடைத்தாள். தொடர்ந்து அவருடைய கால்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். பிறகு, அக்காலடிகளில், தான் கொண்டு வந்த நறுமணத்தைப் பூசினாள். அவரை உணவு உண்ண அழைத்த பரிசேயர், இச்செயலைக் கண்டார்.

‘இவர் ஓர் இறைவாக்கினர் என்று சொன்னால், தம்மைத் தொடுகிற இவள் யார்? எப்படிப்பட்டவள்? என்று அறிந்திருப்பார். இவள் பாவியாயிற்றே’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

இயேசு பெருமான் பரிசேயராகிய சீமோனைப் பார்த்து, ‘சீமோனே! நான் உமக்கு ஒன்று சொல்ல வேண்டும்’ என்று கூறினார். அதற்கு மறுமொழியாக சீமோன், ‘போதகரே! சொல்லும்’ என்றார்.

அப்பொழுது அவர், ‘கடன் கொடுப்பவர் ஒருவரிடம், ஒருவர் ‘ஐந்நூறு தெனாரியமும்’ மற்றவர் ‘ஐம்பது’ தெனாரியமுமாக இருவரும் கடன்பட்டு இருந்தனர். கடனைத் தீர்க்க அவர்கள் இருவராலும் இயலவில்லை. இருவருடைய கடனையும், அவர் தள்ளுபடி செய்து விட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?’ என்று கேட்டார்.

சீமோன் மறுமொழியாக, ‘அதிகமான கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என்று நினைக்கிறோம்’ என்றார்.

இயேசு பெருமான் அவரிடம், ‘நீர் சொன்னது சரியானது’ என்று கூறினார்.

பிறகு அப்பெண்ணின் பக்கம் திரும்பினார். சீமோனை நோக்கி, ‘இவளைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்கு வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை. இவளோ தன் கண்ணீரால், என் காலடிகளை நனைத்தாள். அவற்றைத் தன் கூந்தலால் துடைத்தாள். நீர் எனக்கு முத்தம் தரவில்லை. இவளோ, நான் உள்ளே வந்தது முதல், என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். நீர் என் தலையில் எண்ணெய் பூசவில்லை. இவளோ, என் காலடிகளில் நறுமண மிக்க தைலத்தைப் பூசினாள். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன். இவள் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனென்றால், இவளே மிகுதியாக அன்பு கூர்ந்தாள். குறைவாக மன்னிப்புப் பெறுவோர், குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்’ என்று கூறினார்.

பிறகு அப்பெண்ணைப் பார்த்து, ‘உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.’ என்றார். ‘பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?’ என்று, அவரோடு பந்தியில் அமர்ந்தவர்கள், தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள்.

இயேசு பெருமான் மீண்டும் அப்பெண்ணை நோக்கி, ‘உமது நம்பிக்கை, உம்மை மீட்டது. அமைதியுடன் செல்வாயாக’ என்றார்.

இந்நற்செய்தியில் நாம் அறிய வேண்டிய செய்தி என்ன? என்பதை எண்ணிப் பார்ப்போம். இயேசு பெருமானின் பார்வை வேறு மாதிரியும், சீமோனின் பார்வை வேறு மாதிரியும் இருக்கிறது என்பதை, நாம் முதலில் உணர வேண்டும்.

‘இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், இவரைத் தொடுகிற இவள் யார்? எத்தகையவள் என்பதை அறிந்திருப்பார். இவள் பாவியாயிற்றே’- இது, உணவருந்த அழைத்த பரிசேயரின் பார்வையாகும். பரிசேயர் எதையும் கூறவில்லை. ஆனால் இப்படி எண்ணுகிறார். இயேசு பெருமான் இதை உணராமல் இல்லை. உடனே ஒரு கேள்வியைத் தொடுக்கிறார். வினா தொடுத்து சிந்திக்க வைப்பதும், விடையை அவர்களின் வழியே அறிய முற்படுவதும், இயேசு பெருமானின் வாழ்க்கையில் பல இடங்களில் நாம் அறிந்த ஒன்று.

சீமோன் மூலமாகவே, பதிலைப் பெறுகிறார். அதிகமாக அன்பு செலுத்துபவர் யார்? என்ற வினாவில், ஏனையோரால், ‘பாவி’ என்று கருதப்பட்ட, அப்பெண்ணின் செயல்பாடுகளை, அதிலும் முக்கியமாக, உணவு உண்ணும் இடத்தில் நடந்த செயல்பாடுகளை வெளிப்படையாக அப்படியே விவரிக்கிறார்.

இறுதியாக, அவர் கூறும் வார்த்தையை நுட்பமாக அறிந்து, தெளிவு பெறுவதில்தான், இந்நற்செய்தியின் சிறப்பு வெளிப்படுகிறது.

‘இவள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில், மிகுதியாக இவளே அன்பு கூர்ந்தாள். குறைவாக மன்னிப்புப் பெறுவோர், குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்’ என்கிறார்.

அப்பெண்ணுடைய வெளிப்புற வாழ்க்கையையும், வெளிப்புறச் செயல்பாட்டையும் சீமோன் பார்க்கிறார். இயேசு பெருமான், வெளிப்புற வாழ்க்கையைப் பார்க்கவில்லை. அவளுடைய உள் மனதையும், உண்மையான ஈடுபாட்டையும் கவனிக்கிறார்.

ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பதை இயேசு பெருமான் பிரித்துப் பார்க்கவில்லை. பிற யூத ஆண்களைப் போல், அவர் செயல்படவில்லை. புதிய ஏற்பாட்டை உருவாக்கும் செயலில் அவர் இறங்கி, வழிகாட்டுகிறார். பெண்களை அடிமைப்படுத்தி, அவள் தவறானவள் என்று, ஒரு பாலினப் பகுதியை மட்டும் சுட்டிக் காட்டும் நிலையில் இருந்து மாறுபடுகிறார். நேர்மையும் உண்மையும், இருபாலருக்கும் பொதுவானது என்பதை இயேசு பெருமானின் வழியே நாம் உணர வேண்டும்.

இத்தூயவரைக் கண்ட அப்பெண், என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை, அவர் உணர்ந்ததால் தான், மற்றவர்கள், தத்தமக்குள்ளே பேசியதை மட்டும் எண்ணாமல், அவளைப் பார்த்து, ‘உமது நம்பிக்கை உம்மை மீட்டது. அமைதியுடன் செல்க’ என்கிறார்.

இயேசு பெருமான் வேறோர் இடத்தில் குறிப்பிட்டதைப்போல, ‘பிறரை குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்காதீர்கள். அப்படியிருந்தால்தான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.

‘ஏதிலார் குற்றம் போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு’

அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல், தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ? என்ற திருக்குறளையும், நற்செய்தியோடு இணைத்துப் பார்த்து திருந்தி வாழ நாமும் முனைவோம். 

Next Story