ஆண்டாள் அருளிய திருப்பாவை


ஆண்டாள் அருளிய திருப்பாவை
x
தினத்தந்தி 19 Dec 2017 5:21 AM GMT (Updated: 19 Dec 2017 5:21 AM GMT)

திருமாலை அன்றி ஒருவரையும் மணாளனாக ஏற்க மறுத்தவர் ஆண்டாள். அதற்காக பாவை நோன்பை மேற்கொண்டு, தன் விருப்பப்படியே திருமாலை மணம் புரிந்தவர்.

திருமாலை அன்றி ஒருவரையும் மணாளனாக ஏற்க மறுத்தவர் ஆண்டாள். அதற்காக பாவை நோன்பை மேற்கொண்டு, தன் விருப்பப்படியே திருமாலை மணம் புரிந்தவர். இவர் ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவர். இறை வனுக்காக மாலை தொடுப்பதற்காக பூப்பறிக்கச் சென்ற வேளையில், ஒரு பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டு, அந்தக் குழந்தையை எடுத்து வந்து வளர்த்தார் பெரியாழ்வார். அந்தக் குழந்தையே மகாலட்சுமி அம்சம் பொருந்திய ஆண்டாள்.

வளர வளர ஆண்டாளுக்கு அரங்கநாதனின் மீதான காதல் வளர்ந்து கொண்டே சென்றது. அவரையே மணம் முடிக்க எண்ணினார். தினமும் தன் தந்தை திருமாலுக்காக தொடுத்து வைக்கும் மாலையை, தான் அணிந்து அழகு பார்ப்பார். இதனால் ஆண்டாளை ‘சூடிக் கொடுத்த சுடர்கொடியாள்’ என்பார்கள். ஆண்டாளின் இந்த செய்கையை ஒருநாள் கண்டுவிட்ட பெரியாழ்வார், கோபம் பொங்க ஆண்டாளை ஏறிட்டார். ஆனால் திருமால் தடுத்தாற் கொண்டு, ஆண்டாளை மணம் முடித்துக் கொண்டார்.

‘திரு’ என்றால் மரியாதைக்குரிய என்று பொருள். பாவை என்றால் பெண். மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய பெண் தெய்வமான ஆண்டாள் பாடிய பாமாலையே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. பாவை ஒருவர் பாடியதாலும், பெண்கள் இருக்கும் நோன்பைப் பற்றிய பாடல் என்பதாலும், இது திருப்பாவை என்று பெயர் பெற்றது.

திருப்பாவை மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது. திருப்பாவையின் முதல் பாடலானது, திருப்பாவையின் தொகுப்பு பாடப்பட்டதற்கான நோக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் சுருக்கமாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 2 முதல் 5 வரையான பாடல்கள், திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள நாராயணரின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.

ஆறு முதல் பதினைந்து வரையான துதிப்பாடல்கள், ஆழ்வார்களுக்கு ஒப்பாக, பெண் தோழியர்களை கற்பனை செய்து கொண்டு அவர்களை எழுப்பி, நீராடிவிட்டு கோவிலுக்கு செல்வதை சொல்கிறது. அடுத்து வரும் பதினைந்து பாடல்களும், ‘உன்னையே கணவனாக எண்ணிக் கொண்டுள்ள என்னை ஏற்றுக்கொள்’ என்று வெண்ணெய் உண்டவனை நினைத்து உருகிப்பாடுவதாக அமைந்திருக்கிறது.

பாடல் பாடும் முறை

மார்கழி மாதம் அதிகாலை 4.30 மணிக்குள்ளாக எழுந்து நீராடி, கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியோ திருப்பாவை பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். திருப்பாவை பாடல்களை முழுமையாக அல்லாமல், மார்கழி மாதம் முழுவதற்கும் வருமாறு ஒரு நாளைக்கு ஒரு பாடலாக, அந்த ஒரு பாடலை மூன்று முறை பாடவேண்டும்.

முதல் நாள் என்றால் அன்றைய தினம், ‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...’ எனத் தொடங்கும் பாடலை மட்டும் மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு படித்து வரும்போது, மார்கழியில் 29 நாட்களே உண்டு என்பதால், கடைசி நாளில் மட்டும் இரண்டு பாடல்களையும் சேர்த்து மூன்று முறை பாட வேண்டும். இத்துடன் தினமும் வாரணமாயிரம் பகுதியில் இருந்து, ‘வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத..’ உள்ளிட்ட பிடித்தமான பாடல்களையும் துதிப்பாடல்களாக சேர்த்து பாட வேண்டும்.

இந்த பாவை நோன்பு நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள்.

Next Story