பல்வேறு வடிவங்களில் அருள்தரும் பிள்ளையார்


பல்வேறு வடிவங்களில் அருள்தரும் பிள்ளையார்
x
தினத்தந்தி 23 Jan 2018 6:52 AM GMT (Updated: 23 Jan 2018 6:52 AM GMT)

ஆகமங்கள் கல், மண், மரம், செம்பு ஆகியவற்றால் இறை உருவங்களை செய்யவேண்டும் என்று குறிப்பிடுகின்றன.

ந்த ஒரு காரியத்தையும் பிள்ளையார் வழிபாட்டுக்குப் பிறகே செய்யவேண்டும் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும். அதற்கேற்ப பிள்ளையார் வழிபாடு என்பது எளிமையான நடைமுறைகளை கொண்டுள்ளது. ஆகமங்கள், கல், மண், மரம், செம்பு ஆகியவற்றால் இறை உருவங்களை செய்யவேண்டும் என்று குறிப்பிடுகின்றன.

கஜமுகன் என்று பிள்ளையாரை குறிப்பிடுவதன் அர்த்தம், யானை மிகவும் புத்தி கூர்மையுடையது என்பதாகும். ஐங்கரன் என்று கூறும்போது, தும்பிக்கை எனும் ஐந்தாவது கரம் எவ்வுளவு துரிதமாகவும், திறமையாகவும் செயல்படுகிறது என்பதை உணர்த்துகிறது.

பெரிய தலை என்பது உயர்ந்த சிந்தனையையும், சிறிய கண்கள் கூர்மையான பார்வையும், முறம் போன்ற பெரிய காதுகள் கவனமாக கேட்பதையும், சிறிய அளவுள்ள வாய் குறைவாக பேசுவதையும், பெரிய வயிறு காரணமாக அனைத்து பிரச்சினை களையும் தனக்குள் ஜீரணித்து அவற்றை தீர்த்து விடுவதையும் அவரது உருவம் நமக்கு உணர்த்துவதாக கொள்ளலாம்.

மண், பசுஞ்சாணம், மஞ்சள், மாக்கல், கருங்கல், பளிங்கு கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்தி மரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், திருநீறு, சர்க்கரை, வெல்லம் போன்ற பொருட்களாலும் விநாயகர் வடிவம் அமைத்து வழிபடலாம். தேவை களுக்கு தக்கவாறு பல்வேறு பொருட்களால் ஆவாகனம் செய்து வழிபட்டு, பலன்கள் பெறலாம்.

மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் ஏற்படும்.

குங்குமத்தில் பிடித்து வைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகுவதாக ஐதீகம்.

பசும் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை வணங்கினால் விவசாயம் செழிப்பதுடன், உடல் நோய்கள் அகலுவதாகவும் நம்பிக்கை.

வெல்லம் மூலம் அமைக்கப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால், உடலுக்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இடங்களில் உருவாகும் கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் மறைந்து விடுவதாக ஐதீகம்.

உப்பினால் செய்த பிள்ளையாரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை விலகி விடுவதாக நம்பிக்கை.

வெள்ளெருக்கு விநாயகரை வழிபாடு பில்லி, சூனிய பாதிப்புகளை தடுக்கிறது.

விபூதியால் பிடித்து வைத்து வழிபட்டால் நோய்கள் தீர்வதாக ஐதீகம்.

சந்தன பிள்ளையார் வழிபாடு காரணமாக புத்திர பாக்கியம் ஏற்படுவதாக நம்பிக்கை.

சர்க்கரை பிள்ளையார் செய்து வழிபட்டால் நீரிழிவு நோய் தீரும் வாய்ப்புகள் ஏற்படும்.

வாழைப்பழத்தில் பிள்ளையாரை அமைத்து வழிபட்டால் வம்ச விருத்தி ஏற்படுவதாக நம்பிக்கை.

வெண்ணெய் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் வியாபார கடன் உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைகளும் விலகுவதாக ஐதீகம். 

Next Story
  • chat