பெந்தேகோஸ்தே விழா


பெந்தேகோஸ்தே விழா
x
தினத்தந்தி 14 March 2018 7:22 AM GMT (Updated: 14 March 2018 7:22 AM GMT)

பெந்தேகோஸ்தே விழா அறுவடைப் பெருவிழா என்றும், வாரங்களின் விழா என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

நிசான் மாதத்தின் 14-ம் நாள் பாஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. அடுத்த நாளிலில் இருந்து புளிக்காத அப்பத் திருவிழா ஆரம்பமானது.

நிசான் மாதத்தின் 16-ம் நாள் முதற்பலன் விழா கொண்டாடப்பட்டது. இப்போது முதல் பலன் விழாவிலிருந்து ஐம்பதாவது நாள் இந்த பெந்தேகோஸ்தே விழா கொண்டாடப்படுகிறது.

முதற்பலனில் இறைவனுக்கு பார்லி படைக்கப்பட்டது, அது இறைமகன் இயேசுவைக் குறிப்பதாய் அமைந்தது. இப்போது ஐம்பது நாட்கள் கழிந்து வருவது கோதுமை அறுவடையின் காலம்.

கோதுமையை இறைவனுக்குப் படைக்கும் விழாவாக இந்த அறுவடைப் பெருவிழா அல்லது பெந்தேகோஸ்தே நாள் கொண்டாடப்படுகிறது. ‘பெந்திகோஸ்தே’ எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த பெந்தேகோஸ்தே எனும் பெயர் வந்தது. இதற்கு ஐம்பது என்பது பொருள்!

முதற்பலன் நாளில் இருந்து ஏழு வாரங்களைக் கணக்கிட்டு அதற்கு அடுத்த நாளில் இந்த விழா கொண்டாடுவதால், வாரங்களின் விழா என்றும் அழைக்கப்படுகிறது. ‘ஏழு’ என்பது முழுமையின் குறியீடு. அடிமைத்தனத்திலிருந்து மனிதன் முழுமையாய் மீட்படைந்ததன் அடையாளம் இது.

இதைக்குறித்து இறைவனின் கட்டளை இவ்வாறு கூறுகிறது.

“ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும். ஏழாம் ஓய்வு நாளுக்கு மறு நாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.

நீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு பலியாகக் கொண்டு வாருங்கள். ஓராண்டான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும் ஆண்டவருக்கு எரிபலியாகச் செலுத்துங்கள்.

உங்கள் நாட்டில் நீங்கள் அறுவடை செய்யும்போது உங்கள் வயலோரத்தில் இருப்பதை முற்றிலும் அறுத்துவிடாமலும், சிந்திக்கிடக்கும் கதிர்களைப் பொறுக்காமலும் இருங்கள். அவற்றை எளியவருக்கும் அன்னியருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!”

விளைச்சலின் பயனை இறைவனுக்குப் படைக்கும் விழாக்கள் உலகெங்கும் பல்வேறு வகைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த அறுவடை விழாவும் சுமார் 3500 ஆண்டுகளாக நினைவு கூரப்பட்டு வருகிறது.

இதுவும் இறைமகன் இயேசுவைக் குறியீடாய் கொண்ட ஒரு விழாவே. முதற்பலனாக இறைமகன் இயேசு இருக்கிறார், இரண்டாவதாக இந்த அறுவடை விழா மனிதர்களை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வின் குறியீடு.

எனவே தான் இங்கே புளிப்பான மாவு பயன்படுத்தப்படுகிறது. புளிப்பு என்பது பாவத்தைக் குறிப்பது. பாவியாகிய நம்மை மீட்டுக்கொண்ட இறைவனின் திட்டம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தேர்ந்து கொண்ட இஸ்ரேல் இனமும், தேர்ந்து கொள்ளப்படாத பிற இனங்களும் இறைவன் முன்னில் இணையும் குறியீடே இரட்டை அப்பங்கள்.

மோசே இஸ்ரேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்துக் கொண்டு வெளியே வந்த ஐம்பதாவது நாளில் சீனாய் மலையில் இறைவன் பத்து கட்டளைகளைக் கொடுக்கிறார். அந்த வார்த்தைகள் அடங்கிய சட்டங்களை மோசே சுமந்து வருகிறார்.

இறைமகன் இயேசு உயிர்த்தபின் ஐம்பதாவது நாளில் தூய ஆவியானவர் சீடர் களின் மேல் நெருப்பு நாவாக வந்து இறங்கினார். இறைவனை விவிலியம் “வார்த்தை” என்கிறது. மோசேயிடம் வார்த்தைகள் எழுத்து வடிவமாக கிடைத்தன, இங்கே தூய ஆவி வடிவமாக கிடைக்கின்றன.

மோசே கட்டளைகளைப் பெற்ற அந்த ஐம்பதாவது நாளிலும் சத்தமும், பெருங்காற்றும், நெருப்பும் இருந்தன. புதிய ஏற்பாட்டின் பெந்தேகோஸ்தே நாளிலும் நெருப்பும், பெருங்காற்றும், சத்தமும் இருந்தன.

மோசே கட்டளைகளைக் கொண்டு வந்த நாளில் மக்கள் இறைவனை விட்டு விலகி கன்றுக்குட்டியை வணங்கிக் கொண்டிருந்தார்கள். சட்டம் கொண்டு வந்த அந்த நாளில் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர். தூய ஆவி வந்திறங்கிய நாளில் சீடர்கள் பல மொழிகளில் பேச, மக்களில் மூவாயிரம் பேர் மீட்புக்குள் வந்தனர்.

“எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு; தூய ஆவியால் விளைவது வாழ்வு” (2 கொரி 3:6) எனும் இறைவார்த்தை நிறைவேறும் நிகழ்ச்சியே இதில் மறைந்துள்ள மறை உண்மை.

புதிய ஏற்பாட்டில் அறுவடை என்பது தானிய அறுவடை என்பதைத் தாண்டி, இதயங்களை இறைவனிடம் கொண்டு வரும் நிகழ்வு எனலாம். “உங்களை மனிதரைப் பிடிப்போர் ஆக்குவேன்” என இறைமகன் இயேசு நற்செய்தி அறிவிக்க சீடர்களை அழைத்தார். முதற்பலனான இறைமகன் உயிர்த்து விட்டார், இப்போது இரண்டாம் பலனான நாம் கிறிஸ்துவின் அன்பில் இணையவேண்டும். அதுவே இந்த புதிய அறுவடை.

சுயநலமற்ற சிந்தனைகளோடு இறைமகனிடம் நம்மை நாமே அர்ப்பணிப்பதே இந்த விழாவின் இன்றைய சிந்தனை.

(பண்டிகை தொடரும்)


Next Story
  • chat