பன்மைச் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும்?


பன்மைச் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும்?
x
தினத்தந்தி 4 May 2018 9:53 AM GMT (Updated: 4 May 2018 9:53 AM GMT)

பன்மைச் சமூகத்தில் வாழும் ஒரு முஸ்லிம் அனைத்து சமுதாயத்தினரையும் அர வணைத்துச் செல்லக்கூடியவனாகவே வாழவேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

அரவணைத்தல் என்றால் இஸ்லாத்தின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு சரணாகதி அடைவதல்ல. கொள்கையில் விட்டுக்கொடுக்காமல் வாழும் அதேவேளை, அடுத்தவருடைய பிரச்சினையில் நாமும் பங்குபெற்று உதவி ஒத்தாசைகள் செய்ய வேண்டும்.

அப்போதுதான் நாமும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற உணர்வும், நமது பிரச்சினைகளில் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆவலும் அனைவருக்கும் ஏற்படும்.

பொதுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் நமக்கான பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தும்போது, நமக்காக நாம் மட்டுமே தனித்து நின்று போராட வேண்டிய நிர்பந்தச் சூழல் ஏற்பட்டுவிடும்.

கவுரவக் கொலைகள், சாதிப்பிரச்சினை, வறுமை, வேலையின்மை, வட்டி, மது, காவிரி நீர் பங்கீடு, விலைவாசி உயர்வு, பொதுச் சொத்துகள் கொள்ளை போகுதல், கிரானைட் கொள்ளை போன்ற ஏராளமான வாழ்வாதாரப் பிரச்சினைகளின்போது முஸ்லிம்களாகிய நாம் ஒதுங்கி வாழ்ந்தால் நமக்கான பிரச்சினைகளில் நாம் ஒதுக்கப்படுவோம் என்பதே நிதர்சனம்.

அடுத்தவர் பிரச்சினைகளை அடுத்தவர் பிரச்சினைகளாக மட்டுமே பார்க்கும் காலம் வரை இதில் ஈடுபாடு ஏற்படாது. மாறாக அவற்றையும் நமது பிரச்சினையாகக் காணும் கண் வேண்டும்.

நபிகளாரின் வாழ்வு வெற்றிகரமாக அமைந்தமைக்கும், குறுகிய காலத்தில் பெரும் புரட்சிகளை செய்து முடித்தமைக்கும் காரணம், அனைத்து மக்களையும் அண்ணலார் (ஸல்) அவர்கள் அரவணைத்துச் சென்றமையே.

இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னரே ‘ஹில்புல் புளூல்’ என்ற சங்கத்தின் அங்கத்தவராக நபிகளார் இருந்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதற்காக மக்காவில் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அமைப்புதான் இது. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக ஏனையோருடன் சேர்ந்து முஹம்மத் (ஸல்) அவர்களும் போராடியுள்ளார்கள்.

இறைத்தூதராக அனுப்பப்பட்டு நீண்ட காலத்திற்குப் பின்னர் மதீனாவில் வைத்து நபிகளார் (ஸல்) இது குறித்து இவ்வாறு நினைவு கூர்ந்தார்கள்: ‘ஹில்புல் புளூல் சங்கத்து மக்கள் இப்போது என்னை அழைத்தாலும் கட்டாயம் நான் செல்வேன்’.

அடுத்தவர் பிரச்சினைகளின்போது, ‘நமக்கெதற்கு வம்பு, நம் வீட்டுக் கதவைத் தட்டும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஒதுங்கி இருந்தால், ஒருநாள் நிச்சயம் நாமும் ஒதுக்கப்படுவோம்.

அடுத்தவர்களுக்கு உதவியதால்தான் நபி களாரின் வாழ்வு முழுக்க, சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் உதவி கிட்டியிருந்ததைப்பார்க்க முடிகிறது. பிற மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக அவர்களுக்கு உதவிகள் செய்யாமலோ, அவர்களின் ஒத்தாசையை ஏற்காமலோ நபி (ஸல்) அவர்கள் இருந்ததில்லை.

பன்மைச் சமுதாயத்தில் அடுத்தவர்களுடன் கலந்து வாழ்வது குறித்த பெருமானாரின் வாழ்க்கைக் குறிப்புகளையும் வரலாற்று ஏடு களையும் புரட்டிப் பார்த்தால்.. வந்து குவியும் குறிப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. படிக்கப் படிக்க விழிகள் விரிகின்றன.

பெருமானாரின் வாழ்வு முழுவதும் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் நிறைந்து காணப்படுகின்றார்கள். உதவி தேவைப்படும் கட்டத்தில் ஓடோடி வந்து ஒருவர் உதவுகிறார். அவரோ முஸ்லிம் அல்ல. அடைக்கலம் தேவைப்படும்போது அவசரமாக ஒருவர் அடைக்கலம் கொடுக்கின்றார். அவரும் முஸ்லிம் அல்ல. பயணத்தில் ஒருவர்.. பாதுகாப்பில் ஒருவர்.. என பெருமானாரின் வரலாறு நெடுக முஸ்லிம் அல்லாதவர்களைக் காண முடிகிறது. அருகாமையிலும் அருமை.

மக்காவின் ஆரம்ப நாட்களில் நபிகளாருக்கு நிழலாகவும் அரணாகவும் இருந்த பெருமானாரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள், ஒரு முஸ்லிம் அல்ல.

மதீனத்து மக்களோடு செய்துகொண்ட அகபா எனும் பெரும் உடன்படிக்கையின்போது முஸ்லிம்களின் சார்பாக நபி (ஸல்) அவர்களோடு உறுதுணையாக நின்றவர் அப்பாஸ் (ரலி). அன்றைய தினம் அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.

மக்காவில் ஆரம்பகால முஸ்லிம்களுக்கு பெரும் துன்பமும் துயரமும் ஏற்பட்டபோது எத்தியோப்பியாவுக்குப் புலம்பெயர்ந்து செல்லுமாறு தோழர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் பணித்தார்கள். அப்போது எத்தியோப்பியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நஜ்ஜாஷி அரசர் முஸ்லிம் அல்ல.

நபிகளாரும் குடும்பமும் ஊர்விலக்குச் செய்யப்பட்டு அபூதாலிப் எனும் பள்ளத்தாக்கில் சிறை வைக்கப்பட்டபோது, அந்தத் தடையை உடைக்க முழு முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றவர்கள் முஸ்லிம் அல்லாத ஒருசில இளைஞர்களே.

தாயிப் நகரிலிருந்து சொல்லடியும், கல்லடியும் பட்டு, ரத்தம் வழிந்தோட மக்காவுக்குத் திரும்பி வரும்போது, மக்கத்து மக்கள் என்ன செய்வார்களோ.. என்ன நடக்குமோ.. என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அஞ்சியபோது, நபிகளாருக்கு அடைக்கலமும் அபயமும் கொடுத்த முத்யிம் பின் அதி என்பவர் முஸ்லிம் அல்ல.

சரித்திரத்தை மாற்றியமைத்த ‘ஹிஜ்ரத்’ எனும் புலம்பெயர்வின் போது நபிகளாருக்கு வழிகாட்டியாக இருந்த அப்துல்லாஹ்பின் உரைக்கத் என்பவர் முஸ்லிம் அல்ல.

நபிகளாருக்குப் பணிவிடை செய்தவர்களில் முக்கியமானவர் ஒரு சிறுவர். அவர் முஸ்லிம் அல்ல. மாறாக யூத குலத்தைச் சார்ந்தவர்.

நபிகளார் (ஸல்) நோயுற்றபோதெல்லாம் சிகிச்சை செய்த ஹாரிஸ் பின் கல்தா என்ற மருத்துவர் முஸ்லிம் அல்ல.

கைபர் போரின்போது நபிகளாருக்கு உதவிகள் செய்வதற்காக இணைவைப்பாளர்கள் முன்வந்தபோது அந்த உதவிகளை நபி (ஸல்) அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள்.

வாழ்நாள் எல்லாம் தமக்குத் துரோகமும் அநீதியும் செய்த மக்கத்து மக்கள் பெரும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டபோது, ஹாதிப் இன் அபீ பல்தஉ என்பவர் மூலம் 500 தங்க தீனார்களை மக்காவுக்குக் கொடுத்தனுப்பி, கோதுமை வாங்கி மக்கத்து மக்களுக்கு வினியோகிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். வெறுப்பை அறுவடை செய்யவில்லை.

ஏன் இறுதி காலத்தில் வறுமை வாட்டியபோது தமது கவச உடையை அடமானம் வைத்திருந்தது ஒரு யூதரிடம்தான் என்பது இன்னும் ஆச்சரியம். இத்தனைக்கும் உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) போன்ற பெரும் செல்வந்தர்கள் முஸ்லிம்களிடையே இருக்கத்தான் செய்தார்கள்.

வரலாறு முடியவில்லை. இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது. சுருக்கமாகக் கூறுவதெனில்... ஓர் இறைநம்பிக்கையாளர் பன்மைச் சமூகத்தில் எவ்வாறு அனுசரித்து வாழவேண்டும் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது நபிகளாரின் வாழ்வு.

அனைத்து மக்களையும் அரவணைத்துச் சென்ற அண்ணலாரின் வாழ்வையே நாமும் இந்த நாட்டில் வாழ்ந்து காட்டவேண்டிய சூழலில் இப்போது உள்ளோம். நபிகளாரின் வாழ்வை விட சிறந்த முன்மாதிரி இருக்க முடியுமா என்ன?

மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல். 

Next Story