மீன் வயிற்றில் உயிர் வாழ்ந்த யூனூஸ் நபி


மீன் வயிற்றில் உயிர் வாழ்ந்த யூனூஸ் நபி
x
தினத்தந்தி 13 Jun 2018 5:00 AM GMT (Updated: 13 Jun 2018 5:00 AM GMT)

இறைக்கட்டளைப்படி யூனூஸ் நபிகளை மீன் ஒன்று விழுங்கியது. மீன் வயிற்றில் அடைக்கலமான யூனூஸ் நபிகள் தன் தவறை உணர்ந்தவர்களாக அல்லாஹ்விடம் இறைஞ்சினார்.

அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களை அகில உலகத்திற்கும் அருட்கொடையாக, தனது தூதராக, உலகத்தினர் அனைவருக்குமான நபியாக, அல்லாஹ் அனுப்பி வைத்தான். ஆனால் அவர்கள் காலத்திற்கு முன்பு உலகின் ஒரு ஊருக்கோ, நாட்டிற்கோ அல்லது ஒரு கூட்டத்திற்கோ தான் நபிமார்கள் அனுப்பப்பட்டனர்.

ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்களை அனுப்பியதாக அல்லாஹ் தன் அருள்மறையிலே ஓர் இடத்தில் குறிப்பிட்டுள்ளான். ஆனால் அவர்களில் சிலரைப் பற்றிய குறிப்புகள் பல அத்தியாயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இடம்பெற்றுள்ளது.

அப்படி குறிப்பிடப்பட்டுள்ள நபிகளில் யூனூஸ் நபியும் ஒருவர். ஒரு ஊருக்கான இறைத்தூதராக அவர் அனுப்பி வைக்கப்பட்டார். பல ஆண்டுகள் அல்லாஹ்வின் ஆற்றலை எடுத்துச் சொன்ன போதும் அந்த மக்கள் அதை நம்ப மறுத்து சிலைகளை வணங்கி வந்தார்கள். அதோடு யூனூஸ் நபிகளுக்கும் பலவகைகளில் துன்பங்கள் இழைத்து வந்தனர்.

யூனூஸ் நபிகள் பொறுமையின் எல்லையை அடைந்ததும் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்: “இறைவா, இந்த மக்களுக்கு இத்தனை ஆண்டு காலங்கள் உன் ஆற்றலை எடுத்துச் சொல்லியும், உன்னைத் தவிர்த்து வேறு யாரையும் வணங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியும் அவர்கள் ஏற்கவில்லை. இனிமேலும் இவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனவே இவர்களுக்கான முடிவு என்ன என்பதை நீ நிர்ணயம் செய்திருக்கிறாயோ அதனைக் கொண்டு இவர்களை தண்டித்து விடு”.

அல்லாஹ்வும் இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். “நபியே! நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். என் தூதுச் செய்தியை எடுத்துச் சொல்வது மட்டுமே உங்கள் கடமை. அவர்களை நேர்வழியில் நடத்துவதோ, இல்லை அவர்களுக்கான தண்டனையை தருவதோ என்னைச் சார்ந்தது. இன்று மாலை பெரும் சூறாவளி மழையால் அவர்களை அழித்து விடுவேன். நீங்கள் அதற்குள் இந்த ஊர் எல்லையை விட்டு சென்று விடுங்கள்” என்று ‘வஹி’ (இறைச்செய்தி) மூலம் யூனூஸ் நபிகளுக்கு இறைவன் அறிவித்தான்.

யூனூஸ் நபிகள், தன் மக்கள் கூட்டத்தை நோக்கி “நீங்கள் அல்லாஹ்வை ஏக இறைவனாக ஏற்றுக்கொள்ள மறுத்ததின் காரணத்தால் இன்று இரவுக்குள் உங்களை பெரும் சூறாவளி மழையினால் தண்டித்து அழித்து விடுவான்” என்று எச்சரிக்கை செய்து விட்டு அந்த ஊரை விட்டு சென்று விட்டார்கள்.

அல்லாஹ் விதித்த கட்டளை இறங்க ஆரம்பித்தது. வானில் அடர்ந்த கருமேகங்கள் சூழத்தொடங்கின. அந்த ஊர் மக்கள் தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்து கொண்டார்கள்.

‘இது நிச்சயமாக யூனூஸ் நபிகள் சொன்ன இறைவனின் கோபப்பார்வை தான். இன்னும் சிறிது நேரத்தில் நாம் எல்லோரும் அழிந்து போவோம். எனவே எல்லோரும் ஊருக்கு வெளியே உள்ள மைதானத்தில் ஒன்று கூடுங்கள். நாம் செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கோருவோம். அல்லாஹ் ஒருவனையே நாம் வணங்கும் இறைவனாக ஏற்றுக்கொள்வோம்’ என்று சொல்லியவாறு ஒன்று திரண்டார்கள்.

அனைவரும் ஒன்றிணைந்து, உள்ளத்தால் உண்மையை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடினார்கள்.

கருணையின் பிறப்பிடமான அல்லாஹ் உடனே மனம் இரங்கினான். ‘மக்களுக்கு எந்தவித தீங்கும் செய்ய வேண்டாம், கலைந்து செல்லுங்கள்’ என்று இறைவன் கட்டளையிட, மேகங்கள் கலைந்தன, வேதனையும் நிறுத்தப்பட்டது.

ஏக இறைவன் இந்த சம்பவத்தை திருக்குர்ஆனிலே குறிப்பிடும் போது, யூனூஸ் நபியின் கூட்டத்தார் போன்று மற்ற நபிகளின் கூட்டத்தாரும் மனம் திருந்தி வேதனையிலிருந்து தப்பித்திருக்க வேண்டாமா? என்ற தன் ஆசையையும் அதில் இவ்வாறு வெளிப்படுத்துகிறான்:

“தங்களுடைய நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) ‘யூனூஸ்’ உடைய மக்களைப்போல மற்றொரு ஊரார் இருக்க வேண்டாமா?. அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். அன்றி, சிறிது காலம் சுகம் அனுபவிக்கவும் அவர்களை நாம் விட்டு வைத்தோம்.” (திருக்குர்ஆன் 10:98)

அந்த ஊர் இன்னும் சிறிது நேரத்தில் அழிந்து விடும் என்று எதிர்பார்த்திருந்த யூனூஸ் நபிகள், மேகங்கள் கலைந்து சென்றதும் கவலை கொண்டார்கள். தனக்கு அல்லாஹ் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்ற ஆதங்கம் அவர்கள் மனதில் மேலோங்கியது.

அல்லாஹ்வைப் பொறுத்தவரை நபிமார்கள் அவன் தூதுவர்கள் மட்டும் தான். தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இறைவனை அவர்கள் நிர்பந்திக்க முடியாது. இறைவன் நாடியதே நடக்கும் என்பதற்கும் இது ஒரு பாடமாக அமைந்தது.

ஆனால், மனதில் கோபம் கொண்ட யூனூஸ் நபிகள், கடற்கரைக்குச் சென்று அங்கு நின்றிருந்த கப்பலில் ஏறி அந்த ஊரை விட்டே செல்ல முயன்றார். இந்த செயல் பிடிக்காத காரணத்தினால், யூனூஸ் நபியை சோதிக்க அல்லாஹ் முடிவு செய்தான்.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க அந்தக்கப்பல் நகர மறுத்தது. அக்கால வழக்கப்படி திருவுள சீட்டு போட்டு அதில் யார் பெயர் வருகிறதோ அவரை கடலில் தூக்கி எறிந்து விடுவார்கள். ‘கடலுக்கு பலி கொடுத்து விட்டால் கப்பல் நகர்ந்து விடும்’ என்ற மூட நம்பிக்கை மக்களிடம் இருந்தது. இதன்படி மூன்று முறை சீட்டு எழுதிப்போட்டும், அதில் யூனூஸ் நபிகளின் பெயரே தொடர்ந்து வந்தது. எனவே எல்லோரும் முடிவு செய்து யூனூஸ் நபியை கடலில் எறிந்தனர்.

அப்போது கடலில் உள்ள ஒரு மீனுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான், “என் தூதர் யூனூஸ் நபியை நீ விழுங்கி விடு. பாதுகாப்பாக அவரை நீ உன் வயிற்றில் சுமந்து கொள். என் கட்டளை வரும் போது நீ கரைக்குச் சென்று அவரை உயிரோடு விட்டுவிடு”.

இறைக்கட்டளைப்படி யூனூஸ் நபிகளை மீன் ஒன்று விழுங்கியது. மீன் வயிற்றில் அடைக்கலமான யூனூஸ் நபிகள் தன் தவறை உணர்ந்தவர்களாக அல்லாஹ்விடம் இறைஞ்சினார்.

இந்த நிகழ்வுகள் அத்தனையும் திருக்குர்ஆனிலே இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:

“நிச்சயமாக யூனூசும் நம் தூதர்களின் ஒருவர் தான். மக்களால் நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் அதில் ஏறிக்கொண்டார். அக்கப்பலில் உள்ளவர்கள் சீட்டு குலுக்கி போட்டதில் இவர் கடலில் எறியப்பட வேண்டியவரானார். அவ்வாறு இவர்கள் எறியவே, மீன் அவரை விழுங்கி விட்டது. அச்சமயம் அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார். நிச்சயமாக அவர் நம்மை துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால் மறுமையில் எழுப்பப்படும் நாள் வரை அவர் அதன் வயிற்றில் தங்கி இருந்திருப்பார். அவர் துதி செய்ததின் காரணமாக வெட்ட வெளியான பூமியில் மீன் வயிற்றிலிருந்து அவரை நாம் எறியச் செய்தோம்.” (திருக்குர்ஆன் 37:139-145)

“அவர் கோபமாக சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். ஆதலால் அவரை ஒரு மீன் விழுங்கும்படி செய்து மீன் வயிற்றில் இருள்களிலிருந்த அவர் நம்மை நோக்கி, “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிக பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். என்னை மன்னித்து அருள் புரிவாயாக” என்று பிரார்த்தனை செய்தார்.” (திருக்குர்ஆன் 21:87)

அல்லாஹ் அந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு யூனூஸ் நபிகளை காப்பாற்றினான். அதன்பின் நபியவர்களை “நூறாயிரம் அல்லது அதற்கும் அதிகமான மக்களிடம் தூதுவராக அனுப்பி வைத்தான்”. (திருக்குர்ஆன் 37:147).

இவ்வாறு யூனூஸ் நபியின் சரித்திரத்தை திருக்குர்ஆனில் பல அத்தியாயங்களில் அழகுற அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

சாதாரண மக்கள் மட்டுமல்ல, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிகளும் இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை இந்த நிகழ்வு மூலம் நாம் அறியலாம். மேலும் அல்லாஹ் தன்னை நம்பியவர்களுக்கு வாரி வழங்கும் நன்மைகள் எவை என்பதையும் யூனூஸ் நபிகளின் சரித்திரம் நமக்கு விளக்குகிறது. 

Next Story