அதிகாலை பூஜைக்கு பதிலாக பச்சரிசி சாத நைவேத்தியம்


அதிகாலை பூஜைக்கு பதிலாக பச்சரிசி சாத நைவேத்தியம்
x
தினத்தந்தி 26 Oct 2018 6:24 AM GMT (Updated: 26 Oct 2018 6:24 AM GMT)

பொதுவாக அனைத்துக் கோவில்களிலும் அதிகாலையில் நடை திறந்ததும், கருவறையில் வீற்றிருக்கும் மூலவருக்கு தொடக்க கால பூஜை செய்யப்படுவது வழக்கம்.

கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், திருச்சம்பரம் என்ற ஊரில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில், அதிகாலை பூஜை எதுவும் நடைபெறாமல், நடை திறந்ததும் முதலில் இறைவனுக்கு பச்சரிசி சாதம் படைத்து வழிபடும் வித்தியாசமான வழிபாட்டு முறை வழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தல வரலாறு

பாலகனாக இருந்த கிருஷ்ணனைக் கொல்ல, கம்சன் செய்த சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அந்த இயலாமையால் வருத்தமும், கோபமும் கொண்ட கம்சன், கிருஷ்ணனையும், பலராமனையும் மல்யுத்தப் போட்டிக்கு வரச்செய்து கொல்வதென்று முடிவு செய்தான். அவர்கள் இருவரையும் அழைத்து வரும் பணியை, அக்ரூரர் என்பவரிடம் கம்சன் ஒப்படைத்தான்.

மன்னரின் கட்டளையை மீற முடியாத அக்ரூரர், பிருந்தாவனத்திற்குச் சென்று, மல்யுத்தத்தைக் காண மதுராவிற்கு வரும்படி கிருஷ்ணன் மற்றும் பலராமனுக்கு அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே கம்சன், மதுராபுரிக்கு வரும் இருவரையும் வலிமை மிகுந்த ‘குவாலயபீடம்’ என்னும் யானையைக் கொண்டு கொல்ல வேண்டுமென்று யானைப்பாகனிடம் சொல்லி வைத்தான்.

அந்த யானையிடம் தப்பித்தால், மதுராபுரியில் இருந்த சாணுரன், முஷ்டிகன், சாலன், தோசாலன், கூடன் என்கிற வலிமையான மல்யுத்த வீரர்களிடம், கிருஷ்ணன் மற்றும் பலராமனை எப்படியாவது மல்யுத்தத்திற்கு வரச்செய்து கொன்றுவிட வேண்டுமென்று அறிவுறுத்தினான்.

மல்யுத்தத்தைக் காண மதுராபுரிக்கு நுழைந்த கிருஷ்ணன் மற்றும் பலராமனை வழிமறித்த யானை பாகன், அவர்கள் இருவரையும் கொல்ல யானையை ஏவினான். ஆனால், கிருஷ்ணர் அந்த யானையையும், யானை பாகனையும் கொன்றுவிட்டு, மல்யுத்தக் களத்திற்கு வந்தனர்.

அங்கு அவர்கள் இருவரையும், மல்யுத்தத்திற்கு வரும்படி, கம்சனால் ஏவப்பட்ட மல்யுத்த வீரர்கள் அழைத்தனர். ஆனால் கிருஷ்ணரும் பலராமரும் தாங்கள் சிறுவர்கள் என்றும், பெரியவர்களான தங்களுடன் மல்யுத்தம் செய்வது யுத்த தர்மத்திற்கு புறம்பானது என்றும் வாதாடினர்.

ஆனால் மல்யுத்த வீரர்கள், அவர்கள் இருவரையும் ஏளனமாகப் பேசிப் போட்டிக்கு வர வைத்தனர். மல்யுத்த வீரர்களில் சாணுரனைக் கிருஷ்ணனும், முஷ்டிகனைப் பலராமனும் கொன்றனர். பின்னர் தங்களுடன் போட்டியிட்ட அனைத்து மல்யுத்த வீரர்களையும் கொன்று குவித்தனர். இதனைக் கண்டு அதிர்ந்து போனான், கம்சன்.

ஆவேசத்தில், கிருஷ்ணனையும், பலராமனையும் கொல்லும்படி ஆணையிட்டான். இதனால் கோபம் அடைந்த கிருஷ்ணன், அரசவையில் வீற்றிருந்த கம்சனை அங்கிருந்து, மல்யுத்தக் களத்திற்கு இழுத்து வந்து கொன்றான். கம்சனுக்கு ஆதரவாக வந்த கம்சனின் எட்டு சகோதரர்களையும் பலராமன் கொன்றான்.

நீண்ட நேரமாக மல்யுத்தம் செய்து, கம்சனையும் கொன்ற கிருஷ்ணர் அதிகாலை வேளையில், தன்னைப் பெற்ற தாய் தேவகியைச் சந்தித்தார். தாயிடம் தனக்குப் பசிப்பதாகச் சொல்லி, அவர் தந்த உணவை வாங்கிச் சாப்பிட்டார்.

மகாபாரதத்தில் வரும் இந்தக் கதை, காட்டிற்குள் தவமியற்றி வந்த சாம்பர முனிவர் மனதிற்குள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர், அங்கு கம்ச வதம் செய்து திரும்பிய கிருஷ்ணரின் உருவச் சிலையை நிறுவி வழிபட்டு வந்தார் என்றும், பிற்காலத்தில் பரசுராமர் அங்கு கோவில் அமைத்து, வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தார் என்றும் ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.கோவில் அமைப்பு

இந்த ஆலயத்தின் கரு வறையில் கம்ச வதத்திற்குப் பின்பான கிருஷ்ணர், சிறிது சினத்துடன் வலது கரத்தில் சிறிய குச்சியும், இடது கரத்தில் சங்கும் வைத்துக் கொண்டு கிழக்கு பார்த்த நிலையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வெள்ளியாலான மேலாடை அணிவிக்கப்பட்டிருக்கிறது.

இங்கு விசாகச் சேனனுக்குத் தெற்கு பார்த்த நிலையில் தனிச் சன்னிதி இருக்கிறது. இக்கோவில் வளாகத்தில் தவமியற்றும் நிலையில் சாம்பர முனிவர் சிலையும் இடம் பெற்றிருக்கிறது. ஆலய வளாகத்தில் இருக்கும் மூன்று குளங்களில், ஒரு குளத்தின் நடுவில் காளி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் மகாபாரதக் கதையில் வரும் பல்வேறு காட்சிகள், அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் மரச்சிற்பங்கள் மிக அழகாகக் காட்சியளிக்கின்றன.

இந்தத் திருக்கோவிலில் மலையாள நாட்காட்டியின் படி கும்பம் (மாசி) மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மீனம் (பங்குனி) மாதம் 6-ந் தேதி வரை நடை பெறும் ‘கூடிப்பிரிதல்’ எனும் நிகழ்வுடன் நிறைவடையும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் ஒரு விழாவாகும்.

இந்தத் திருவிழாவின் போது, மழூர் என்னும் இடத்தில் இருக்கும் தருமிக்குளங்கரா ஆலயத்தில் இருந்து கொண்டு வரப்படும் பலராமர் சிலை, திருச்சம்பரம் கோவிலில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இடைப்பட்ட நாட்களில் திருச்சம்பரம் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூக்கோத் நடா எனுமிடத்தில் கிருஷ்ணர், பலராமர் தொடர்பான மகாபாரதக் காட்சிகளை ஆடிக் காண்பிக்கும் ‘திடம்பு நிருத்தம்’ எனும் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் தளிப்பிரம்பா எனும் ஊரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருச்சம்பரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் செல்ல கண்ணூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

தேனி மு.சுப்பிரமணி

யானை இல்லாத திருவிழா

* இந்தக் கோவில், கேரளாவில் புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு இணையானது என்று சொல்லப்படுகிறது. இதனை ‘வடக்கு குருவாயூர்’ என்றும் அழைக்கிறார்கள்.

* ஆலயம் அமைந்திருக்கும் பகுதி, இங்கு தவமியற்றிய சாம்பர முனிவரது பெயரைக் கொண்டு, ‘திருச்சம்பரம்’ என்று அழைக்கப்படுகிறது.

* இங்கு தினமும் அதிகாலையில் கோவில் கருவறைக் கதவு திறந்ததும், மற்ற கோவில்களில் நடத்தப்பெறும் நிர்மால்ய பூஜை, ஆராதனை எதுவும் செய்யப்படுவதில்லை. முதலில் கிருஷ்ணருக்கு பச்சரிசி சாதம் படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. கம்சனை வதம் செய்த கிருஷ்ணர், தன் பசியைப் போக்க அதிகாலை வேளையில் தாய் தேவகியிடம் உணவு பெற்றுச் சாப்பிட்டதை நினைவில் கொள்ளும் விதமாக, பச்சரிசி சாதம் படைக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

* பொதுவாக கேரளக் கோவில் விழாக்களில் யானை களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இங்கு தரப்படுவதில்லை. கிருஷ்ணரும், பலராமரும் மல்யுத்தப் போட்டியைக் காண மதுராபுரி வந்த போது, கம்சன் தூண்டுதலால் குவாலயபீடம் எனும் யானை கிருஷ்ணரைக் கொல்ல முயன்றது. அந்த யானையைக் கிருஷ்ணர் கொன்று விட்டார். இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆலய விழாக்களின் போது, யானைகளை பயன்படுத்துவதில்லை என்கிறார்கள்.

* இக்கோவில் திருவிழாவின் கடைசி நாளில் நடை பெறும் ‘கூடிப்பிரிதல்’ நிகழ்விற்கு, ஆயிரம் அப்பம் எனும் சிறப்பு இனிப்பு வகை தயாரித்து, இறைவனுக்குப் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

Next Story