உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு
ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படியே, உங்களுடைய கையின் பிரயாசத்தை நீங்கள் சாப்பிட்டு ஆசீர்வாதமாய் வாழ்வதுதான் தேவனுடைய சித்தம்.
‘தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும், அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்’ (பிரச.5:19) என வேதம் தெளிவாக கூறுகிறது.
அநேகர் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டு மிகுந்த மனவேதனையுடன் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார்கள். ஒரு பக்கம் பணவீக்கமும் மறுபக்கம் விலைவாசி உயர்வும் அநேக தேவ பிள்ளைகளின் விசுவாசத்தை தடுமாறச் செய்து கொண்டிருக்கிறது. இதனால் கடன்பாரம் மற்றும் சமாதான குறைவுகள் ஏற்பட்டு சஞ்சலத்தை அனுபவித்து வருகிறார்கள்.
‘நீ உன் கையின் பிரயாசத்தை சாப்பிடுவாய்’ என்ற உன்னத தேவனின் வாக்குத்தத்தம் உங்கள் வாழ்வில் முற்றிலுமாய் நிறைவேற வேண்டும் என்பது தான் என்னுடைய ஜெபம். அதே வேளையில் இவ்வாக்குத்தத்தம் உங்களில் நிறைவேற நீங்கள் பாத்திரவான்களாய் இருப்பது மிக மிக முக்கியம்.
விசுவாசத்தோடு வேலை செய்யுங்கள்
‘ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்’. (2.தெச.3:8)
பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் காரணமில்லாமலும், திடீரென்றும் ஒருவரை ஆசீர்வதிப்பது இல்லை. கர்த்தருடைய வசனத்தின்படி நம்முடைய வாழ்வு அமையும் போது நிச்சயம் தேவனுடைய ஆசீர்வாதமும், ஐசுவரியமும் நம்முடைய வாழ்க்கையில் தங்கும். தேவனுடைய ஐசுவரியத்தை பெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று வேலை செய்யாத சோம்பேறித்தனமாகும். நாம் ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும் என வேதம் தெளிவாக கூறுகிறது.
பவுல் வல்லமையுள்ள அப்போஸ்தலனாக இருந்தும் ‘இரவும் பகலும் பிரயாசத்தோடும், வருத்தத்தோடும் வேலை செய்து சாப்பிட்டோம்’ என கூறுகிறார்.
குடும்பங்களில் வறுமைக்கு மற்றொரு காரணம், கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையாக இருப்பதில்லை. அதுமாத்திரமல்ல, மனநிறைவோடு செய்யாமல் ஏனோதானோ என அசட்டையாக செய்தல். இன்னும் சிலரை நான் கண்டிருக்கிறேன், தான் விரும்பின வேலை கிடைக்கும் வரை மற்ற எந்த வேலையும் செய்ய மனதில்லாமல் சோம்பேறித்தனமாக வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள்.
அன்பானவர்களே, விதைக்காமல் எப்படி அறுக்க முடியும்? அதைப்போல் வேலைதேட பிரயாசப்படாமல் அல்லது வேலை செய்யாமல் தேவனுடைய ஆசீர்வாதங்களை எப்படி அனுபவிக்க முடியும்? சிந்தித்துப்பாருங்கள், நீங்கள் எப்படி?
பவுல் சொல்லுகிறார், ‘பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்’. (2.தீமோ.2:6.)
ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் நமக்கு கொடுத்த பெலன், ஞானம், அறிவின்படியே கட்டாயம் வேலை செய்து பிரயாசப்பட வேண்டும். அப்போது தான் தேவனுடைய வாக்குத்தத்தம் உங்களில் நிறைவேறும்.
தேவ சித்தப்படி வேலை செய்யுங்கள்
“அதற்குச் சீமோன்: ‘ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்’ என்றான்”. (லூக்.5:5)
மேலே குறிப்பிட்டுள்ள வசனம் பேதுரு தம் வாயினால் கூறின வார்த்தை ஆகும். இது தோல்விக்குரிய வார்த்தையே தவிர ஜெயத்திற்குரிய வார்த்தை இல்லை.
நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் வேலை செய்து பிரயாசப்படவேண்டும். அதே வேளையில் நாம் செய்கிற வேலையோ, தொழிலோ தேவ சித்தப்படி செய்கின்றோமா? என்பது மிக மிக முக்கியம்.
பேதுரு இரவெல்லாம் பிரயாசப்பட்டும் ஒரு மீனும் அகப்படாமல் வெறுமையான வலை, படகோடு கரை திரும்பினார்.
எத்தனை பரிதாபம், நம்மில் அநேகர் வேலை செய்கிறார்கள் அல்லது தொழில் செய்கிறார்கள், அதனிமித்தம் தங்கள் பிரயாசத்தின் பலனையும் தேவனுடைய ஆசீர்வாதத்தையும் அவர்கள் காண முடியவில்லை.
இப்படிப்பட்டவர்கள் அடிக்கடி தங்கள் வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். தொழில் செய்கிறவர்களும் கூட நஷ்டமடைந்து பலவிதமான தொழிலில் ஈடுபட்டு எல்லாவற்றிலும் பின்னடைவு ஏற்பட்டு, தங்கள் விசுவாசத்திலிருந்து வழிவிலகிப் போகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவனை குறைகூறவும் தயங்குவதில்லை.
நாம் செய்கிற ஒவ்வொரு பிரயாசத்திலும், வேலையிலும், தொழிலிலும் தேவ சித்தத்தை கட்டாயம் அறிய வேண்டும்.
‘ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்’. லூக்.5:4
ஆண்டவர் கொடுத்த வார்த்தையின்படியே பேதுரு ஆழத்தில் தள்ளிக் கொண்டு போய் வலையைப் போட்ட போது அவன் கையின் பிரயாசத்தை தேவன் ஆசீர்வதித்தார் என வேதம் கூறுகிறது. ‘அதன்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்’. லூக்.5:6
இம்மட்டும் தேவ சித்தத்தை அறியாமலேயே நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தால் ஆண்டவர் உங்களோடு பேசுகிறார் என்பதை மறந்து விடக்கூடாது. நன்றாக ஜெபம் பண்ணி தேவனுடைய சித்தத்தை தெளிவாக அறிந்து, பெரிய வேலையோ அல்லது சிறிய வேலையோ, பெரிய தொழிலோ அல்லது சாதாரண தொழிலோ எதுவானாலும் சரி சந்தோஷமாக செய்யுங்கள்.
படிப்படியாக கர்த்தர் உங்களை உயர்த்தி தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார். ஆகவே சோர்ந்து போகாதீர்கள். உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு.
பழைய தோல்வியை மறந்துவிட்டு விசுவாசத்தோடு தேவ சித்தத்தை அறிந்து முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் முயற்சிக்கு தக்க பலனை ஆண்டவர் தாமே கட்டளையிடுவார். அதுமாத்திரமல்ல, ‘உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்’ என்ற வாக்குத்தத்தம் உங்களில் நிச்சயம் நிறைவேறும்.
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
Related Tags :
Next Story