புராண கதாபாத்திரங்கள்


புராண கதாபாத்திரங்கள்
x
தினத்தந்தி 11 Dec 2018 10:26 AM GMT (Updated: 11 Dec 2018 10:26 AM GMT)

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...

சயவன் முனிவர்
அஸ்வினி குமாரர்களால் இளமையும், கண் பார்வையும் திரும்ப வரப் பெற்றவர் இந்த சயவன் முனிவர். வயோதிகரான சயவன், நெடுங்காலமாக தவத்தில் இருந்தார். அதனால் அவரைச் சுற்றி புற்று வளர்ந்து, பறவைகள் கூடுகட்டி இருந்தன. ஒரு முறை அங்கு வந்த சர்யாதி மன்னனின் மகள் சுகன்யா, விளையாட்டாய் பறவைகளின் கூட்டைக் கலைக்க, அவளது விரல் எதிர்பாராத விதமாக தவத்தில் ஆழ்ந்திருந்த முனிவரின் கண்ணில்பட்டு பார்வை பறிபோனது. இதையடுத்து தனது மகளை, முனிவருக்கே திருமணம் செய்து வைத்தான் சர்யாதி மன்னன். ஒரு நாள் அஸ்வினி குமாரர்கள், சுகன்யாவைச் சந்தித்தனர். சயவன் முனிவருக்கு இளமையையும், கண் பார்வையையும் தருவதாக கூறினர். பின் சயவன் முனிவரும், அஸ்வினி குமாரர்களும் அங்கிருந்த குளத்தில் மூழ்கி எழுந்தனர். அப்போது அவர்கள் மூவருமே ஒரே உருவத்தில் காட்சியளித்தனர். அதில் சயவன் முனிவரை சரியாக அடையாளம் காட்டினாள் சுகன்யா. இதையடுத்து சயவன் முனிவருக்கு இளமையும், கண் பார்வையும் கிடைத்தது.

துவாரபாலகர்கள்
கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்பவர்கள், கருவறையின் வாசலில் இரு புறமும் சிற்பங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அவர்களே ‘துவார பாலகர்’ என்று அழைக்கப்படுகின்றனர். அதாவது ‘வாயில் காப்போர்’ என்பது பொருள். சிவாலயங்களில் எண்ணற்ற துவாரபாலகர்கள் இருப்பதாக அறியப்படுகிறது. சண்டி- முண்டி, திரிசூலநாதர்- மழுவுடையார், சண்டன்- பிரசண்டன் உள்பட ஐந்து இணை துவாரபாலகர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். வைணவ ஆலயங்களில் ஜெயன்-விஜயனும், பெண் தெய்வ கருவறை முன்புள்ள துவாரபாலகிகளில் சுபத்ரா-அரபத்ரா ஆகியோரும் முக்கியமானவர்களாக உள்ளனர்.

துரியோதனன்
திருதராஷ்டிரன்- காந்தாரி தம்பதியரின் மூத்த மகன். கவுரவர்கள் நூறு பேரில் முதன்மையானவன். ‘துரியோதனன்’ என்பதற்கு ‘வெற்றி கொள்ளப்பட முடியாதவன்’ என்று பொருள். உடல் குறைபாடு காரணமாக தந்தையிடம் இருந்து நழுவிச்சென்ற அரசாளும் பதவியை, பாண்டவர்களிடம் இருந்து பெறவேண்டும் என்ற எண்ணம், துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்களிடம் வன்மத்தை விதைத்தது. அதன் காரணமாக மகாபாரதப் போர் மூண்டது. 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போரின் இறுதி நாளில் பீமனுடன் நடந்த யுத்தத்தில் துரியோதனன் கொல்லப்பட்டான்.

துர்வாசர்
மாபெரும் தவசிகளான அத்திரி - அனுசூயா தம்பதியரில் ஆகச் சிறந்த புதல்வர் தான் துர்வாசர். இவர் மற்ற முனிவர்களைப் போல அல்ல.. தன்னுடைய முன் கோபத்தாலும், சட்டென்று ஒருவரை சபித்துவிடும் தன்மையாலும் கவனம் பெற்றவர். விஸ்வாமித்திரரின் மகளான சகுந்தலை, துஷ்யந்தன் என்ற மன்னனை கந்தர்வ மணம் செய்து கொண்டாள். ஒரு முறை தன்னை அவமதித்த குற்றத்திற்காக துஷ்யந்தனின் மனதில் இருந்து சகுந்தலையின் நினைவுகளை அகற்றி சாபம் அளித்தார் துர்வாசர். சாபத்தை மட்டுமே அளிப்பவர் அல்ல அவர். தன் மனம் மகிழும் படி நடந்து கொள்பவர்களுக்கு வரமும் அளிப்பவர். அவர் பாண்டுவின் மனைவி குந்திக்கு ‘தேவர்களில் எவரை நினைத்தாலும் அவர்கள் வந்து அருள்வார்கள்’ என்ற வரம் அளித்தார். அந்த வரம் தான் கர்ணன், பாண்டவர்களான தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறக்க காரணமாக இருந்தது.

Next Story